தோக்கியோ: டுஜென் சூறாவளியால் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்கு அருகே குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், நால்வரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டுஜென் சூறாவளியால் அப்பகுதியில் பெரும் கனமழை பெய்தது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (செப்டம்பர் 23) காலை எட்டு மணி நிலவரப்படி தோக்கியோவின் கிழக்குப் பகுதியில் உள்ள சிபா மாநிலத்தில் அறுவரும் கனாகாவா மாநிலத்தில் மூவரும் கொல்லப்பட்டனர்.
அவ்விரு மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் இருவரைக் காணவில்லை. கனாகாவாவில் ஒருவர் மோசமான காயங்களுக்கு ஆளானார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 21) ஜப்பானின் கான்டோ வட்டாரத்தை நோக்கிச் சென்ற டுஜென், நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. சிபா, கனாகாவா, இபாராக்கி மாநிலங்களில் கிட்டத்தட்ட 500 வீடுகள் சேதமடைந்ததாக என்எச்கே ஊடகம் தெரிவித்தது.
டுஜென் சூறாவளி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) இரவுக்குள் ஜப்பானின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையிலிருந்து வடகிழக்கே நகர்ந்ததாக ஜப்பானின் வானிலை அமைப்பு குறிப்பிட்டது. அந்த சூறாவளியால் கிழக்கு ஜப்பானின் சில பகுதிகளில் 48 மணி நேரத்தில் 800 மில்லிமீட்டர் உயரத்துக்கும் அதிகமான அளவு மழை பெய்தது.
யோக்கோஹாமா நகரில் எனியோஸ் நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக திங்கட்கிழமை ஜப்பானின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேலும், மியாஸாக்கி மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அமைச்சு சொன்னது.
