ஜப்பானில் உள்ள சிங்கப்பூரர்கள் வானிலையை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் தோக்கியோவை நோக்கி ஜாங்மி சூறாவளி வந்துகொண்டிருப்பதை முன்னிட்டு தோக்கியோவில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் அவ்வாறு கூறியது.
ஷிகோக்கு, கிங்கியின் தெற்குப் பகுதி, கான்டோ-கோஷின் வட்டாரங்கள் ஆகியவற்றில் பலத்த காற்றும் கன மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாழ்வான பகுதிகளில் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்படக்கூடும் என்று ஜப்பான் வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
ஜூன் 2ஆம் தேதியிலிருந்து 3ஆம் தேதிவரை ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஆறுகள் கரைபுரண்டோடக்கூடும் என்று தூதரகம் குறிப்பிட்டது.
சூறாவளி வரும்முன் நிவாரண நிலையங்கள் இருக்கும் இடங்களை அறிந்துவைத்திருக்கும்படி வானிலை அமைப்பு கூறியதையும் கடப்பிதழ் போன்ற முக்கிய பொருள்களைச் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும் அது அறிவுறுத்தியது.
“விமானங்கள், படகுகள் உட்பட பிற பொதுப் போக்குவரத்துச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் அல்லது கடுமையான தாமதத்தை எதிர்கொள்ளலாம். எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு முடிந்தவரை உட்புறங்களில் தங்கியிருங்கள்,” என்று தூதரகம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
இதற்கிடையே, ஜூன் 2, 3ஆம் தேதிகளில் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான குறைந்தது 14 விமானச் சேவைகளைப் புயல் காரணமாக வேறொரு நாளுக்கு மாற்றியுள்ளதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்தது.


