தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான், தென்கொரியாவைத் தாக்கிய கானுன் சூறாவளி

2 mins read
490be982-6af4-4de3-b863-01e0e2546af9
தென்கொரியாவின் சங்வோன் பகுதியில் கடலோரச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்காமல் தடுக்க மணல் சாக்குகளை அடுக்கி வைக்கும் பணியில் தொண்டூழியர்கள். - படம்: இபிஏ

தோக்கியோ/சோல்: கானுன் சூறாவளியின் கனத்த மழையால் ஜப்பானின் தென் வட்டாரங்களிலும் தென்கொரியாவிலும் புதன்கிழமையன்று விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு, ரயில் பயணங்கள் நிறுத்தப்பட்டன.

கானுன் சூறாவளி தென்கொரியாவின் டொங்யோங் துறைமுக நகரை வியாழக்கிழமை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜப்பானின் ஒக்கினாவா வட்டாரத்தைத் தாக்கிய இந்தச் சூறாவளி, தற்போது தோக்கியோவிலிருந்து சுமார் 860 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பகுதியில் மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் மழையும் புயலும் கூடுதல் காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியூ‌ஷூ வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு மாதத்தில் பெய்யுமளவுக்கு மழை பெய்திருப்பதாக ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

ஜப்பானின் தெற்கு, மேற்கு வட்டாரங்களில் கனமழையும் பெருங்காற்றும் எதிர்பார்க்கப்படுவதால், டொயோட்டோ உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு நாள் நிகழ்ச்சியில் புதன்கிழமை கலந்து கொள்ளவிருந்த ஜப்பானியப் பிரதமர் கி‌ஷிடா, கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

ஜப்பானிய விமானச் சேவை நிறுவனம் புதன்கிழமை மட்டும் 252க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களையும், ஆல் நிப்பான் விமானச் சேவை நிறுவனம் கிட்டத்தட்ட 105 விமானப் பயணங்களையும் ரத்து செய்தன. இதனால் ஏறக்குறைய 36,700 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

தென்கொரியாவில் புதன்கிழமை நண்பகலுக்குள் 260க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. சூறாவளியால் கனமழையுடன் பலத்த காற்று வீசினால் பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்படலாம்.

குறிப்புச் சொற்கள்