ஜப்பானைத் தாக்கிய சூறாவளி: இருவர் மரணம், பல விமானப் பயணங்கள் ரத்து

ஜப்பானைத் தாக்கிய சூறாவளி: இருவர் மரணம், பல விமானப் பயணங்கள் ரத்து

1 of 3
படம்: இபிஏ
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: இபிஏ

22 Sep 2026 - 10:56 am

1 mins read

தோக்கியோ: ‘டுஜுவான்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி ஜப்பானை திங்கட்கிழமை தாக்கியதோடு, அங்கு புயல் காற்று, கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றை அதன் விளைவாக ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அங்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் தோக்கியோவையும் கடந்து சென்றுள்ள சூறாவளியால் பல மாநிலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் பெருமழையிலும் இதுவரை இருவர் மரணமடைந்துவிட்டனர் என்று சீபா, கனகவா மாநில உள்ளூர் நகராட்சிகள் தெரிவித்துள்ளன.

ஜப்பானில் கோடை காலத்தின் பிற்பகுதியிலும் இலையுதிர்கால முற்பகுதியிலும் அந்நாட்டை அடிக்கடி சூறாவளிகள் தாக்குவது வழக்கம்.

அங்கு தற்போது நடந்துவரும் ஆசிய விளையாட்டுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

டுஜுவான் புயலில் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. தலைநகருக்கு அருகில் உள்ள கட்சூரா பகுதியை அது மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் எட்டியது.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் சூறாவளி கரையைக் கடந்து வடகிழக்குத் திசையில் கடலை நோக்கிச் சென்றது என்று ஜப்பானிய வானிலை முகவை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்