இஞ்சியோன்: இவ்வாரம் அமெரிக்க, சீன அதிபர்களின் நேரடி உச்சநிலை மாநாட்டுக்கு முன்னதாக அந்நாடுகளின் நிதி அமைச்சர்கள் தென்கொரியாவில் புதன்கிழமை (மே 13) சந்தித்துக்கொண்டனர்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் உலகின் இருபெரும் பொருளியலைக் கொண்ட நாடுகளின் சந்திப்புக்கான அடித்தளப் பணிகளை மேற்கொள்ள அவர்கள் தென்கொரியாவின் இஞ்சியோன் விமான நிலையத்தில் சந்தித்தனர்.
இருவரும் சந்திப்பதற்கு முன், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெஸன்ட்டையும் சீன நிதி அமைச்சர் லீ ஹி ஃபெங்கையும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் அவரது மாளிகையில் வரவேற்றார் .
பலதரப்பட்ட அம்சங்கள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் பங்குபெறும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சர்களின் பேச்சுவார்த்தை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் விதமாக அமையும் எனவும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சீன வர்த்தக விவகாரங்களின் தலைவரும் துணை வர்த்தக அமைச்சருமான லீ செங்காங், துணை நிதி அமைச்சர் லியாவ் மின் ஆகியோரும் நிதி அமைச்சருடன் இருந்தனர்.
புதிய இருநாட்டு வர்த்தக மன்றங்கள்
இருதரப்பு வர்த்தகம், முதலீடு ஆகியவற்றுக்கு தனிப்பட்ட மன்றங்களை உருவாக்க இருநாட்டு அதிபர்களும் பெய்ஜிங் உச்ச மாநாட்டில் ஒப்புதல் வழங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிடம் போயிங் வகை விமானங்கள் வாங்குதல், வேளாண்துறை, எரிபொருள் வர்த்தகம் குறித்தும் மாநாட்டில் சீனா அறிவிக்கும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

