அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு, அதன் வேவுத் துறைத் தலைவரை நீக்கியிருக்கிறது.
தற்காப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரும் செனட்டர் ஒருவரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) அதனைத் தெரிவித்தனர். அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தித் தளங்கள் முற்றாய் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால் வேவுத் துறை தயாரித்த முதற்கட்ட அறிக்கை அதற்கு மாற்றான கருத்தைக் கொண்டிருந்தது.
நகல் அறிக்கை தயாரிக்கப்பட்ட ஒருசில வாரங்களில் ஆகாயப் படையின் லெஃப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி குரூஸ் நீக்கப்பட்டார். திரு டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு வேவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து அகற்றப்படுவது இது இரண்டாம் முறை.
இதற்கு முன்னர் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனரல் திமத்தி ஹோ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
கடற்படையின் மூத்த அதிகாரிகள் துணை அட்மிரல் நேன்சி லக்கோரையும் ரியல் அட்மிரல் ஜேமி சேண்ட்சையும் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் அகற்றியதாகவும் தற்காப்புத் துறை அதிகாரி ஆகஸ்ட் 22ஆம் தேதி கூறினார்.
பதவி நீக்கத்திற்கான காரணங்களை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை.
லெஃப்டினன்ட் ஜெனரல் குரூஸ் நெடுங்காலமாகக் கட்சி சாராமல் சேவையாற்றியவர் என்றும் அவர் பணியிலிருந்து அகற்றப்பட்டது வேதனை அளிக்கிறது என்றும் வெர்ஜீனியாவின் செனட்டர் மார்க் வார்னர் தெரிவித்தார். செனட் சபையின் வேவுக் குழுவிலும் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான திரு வார்னர் இடம்பெற்றுள்ளார்.
“வேவுத் துறையை டிரம்ப் நிர்வாகம் நாட்டிற்கான பாதுகாப்பு என்று கருதாமல் விசுவாசத்திற்கான சோதனையாகப் பார்க்கிறது. தேசியப் பாதுகாப்புத் துறையில் மேலும் ஒரு மூத்த அதிகாரி நீக்கப்படுவது அதன் ஆபத்தான போக்கைப் பிரதிபலிக்கிறது,” என்று திரு வார்னர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
வேவுத் துறையின் இயக்குநராக முன்மொழியப்படுபவரை செனட் சபை ஏற்கும்வரை தற்போதைய துணை இயக்குநர் திருவாட்டி கிறிஸ்டீன் போர்டின் தற்காலிக இயக்குநராக இருப்பார்.

