அமெரிக்காவில் நிலக்கரி, எரிவாயு ஆலைகளின் மாசு வெளியேற்ற வரம்பு ரத்து

அமெரிக்காவில் நிலக்கரி, எரிவாயு ஆலைகளின் மாசு வெளியேற்ற வரம்பு ரத்து

2 mins read
4c68f960-b321-4795-a7f8-35df6cd6e7dc
மின்னிலையங்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலிருந்து எதிர்கால நிர்வாகங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்காவின் சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. - படம்: பிக்சாபே

வா‌ஷிங்டன்: நிலக்கரி, எரிவாயு மின்னிலையங்களிலிருந்து வெளியேறும் மாசுப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை ரத்து செய்வதாக அமெரிக்க சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார்.

மின்னிலையங்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலிருந்து எதிர்கால நிர்வாகங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் பருவநிலை தொடர்பாகப் பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து விலகுவது 310 பில்லியன் அமெரிக்க டாலரைச் ($394 பில்லியன்) சேமிக்க வழிவிடுவதோடு எரிசக்தி விலைகளைக் குறைக்கவும் உதவும் என்று அமைப்பு குறிப்பிட்டது.

ஆனால், இது அமெரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கும் புவிக்கும் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுப்புறக் குழுக்கள் எச்சரித்துள்ளன. அமைப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குகள் தொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

“உலகின் மற்ற எந்த இடத்தையும்விட அமெரிக்கா எரிசக்தியை மிகச் சிறந்த, தூய்மையான முறையில் உற்பத்தி செய்கிறது என்பதே உண்மை. நமது மின்னிலையங்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படக்கூடாது,” என்று சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லீ ஸெல்டின் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.

நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட புதைபடிம எரிபொருள்களே உலகளாவிய பருவநிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணங்களாய் அமைவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.

மின்னிலையங்களின் கரிம வெளியேற்றம் குறித்த பைடன் ஆட்சிக்கால விதிமுறைகள், அமைப்பின் அதிகார வரம்பை மீறியிருப்பதைக் கண்டறிந்துள்ளதாகச் சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்தது.

மேலும், முறையாக நிரூபிக்கப்படாத கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை இந்த விதிமுறைகள் கோருவதாகவும் அறிக்கை குறிப்பிட்டது. மின்னிலையங்களால் உண்மையில் எட்டப்படக்கூடிய தரநிலைகளை நிர்ணயிப்பதற்குப் பதிலாக, அவற்றை மூடும் நிலைக்கு அவை தள்ளுவதாக அமைப்பு கூறியது.

மின்சாரத் துறைக்கான பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறித்த மற்ற விதிமுறைகளை அகற்றவும் அமைப்பு முயன்று வருகிறது.

பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவிருக்கும் இந்த மாற்றங்களைக் கடந்த ஆண்டு திரு ஸெல்டின் முன்மொழிந்தார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்நிலக்கரிஎரிவாயுகரியமிலவாயுவெளியேற்றம்வரம்பு