விமானிகளைப் பணியமர்த்துவதில் மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் தீவிரம்

விமானிகளைப் பணியமர்த்துவதில் மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் தீவிரம்

2 mins read
246aae20-bbca-494b-89e8-bcdc597ec180
விமானிகளை வேலைக்குச் சேர்ப்பதில் எமிரேட்ஸ் மட்டுமல்ல, எத்திஹாட் ஏர்வேஸ், ஏர் அரேபியா, விஸ் ஏர் அபுதாபி போன்ற விமான நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ் -

விமானியாவதற்கு இது உகந்த நேரம்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் மத்திய கிழக்கின் மற்ற நாடுகளிலும் இயங்கிவரும் விமான நிறுவனங்கள், விமானிகளைப் பணியமர்த்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

விமானம் இயக்குவதில் கைதேர்ந்த அனுபவம் உடையோரின் சம்பள எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவிக்கின்றன.

எமிரேட்ஸ் நிறுவனம், அதன் ஏர்பஸ் ஏ350, போயிங் 777எக்ஸ் விமானங்களை இயக்குவதில் விமானிகளுக்குப் பயிற்சியளிக்க, துபாயில் $135 மில்லியன் மதிப்பிலான அதிநவீன வசதிகளை தான் அமைக்கப்போவதாக இந்த வாரம் தெரிவித்திருந்தது.

விமானிகளை வேலைக்குச் சேர்ப்பதில் எமிரேட்ஸ் மட்டுமல்ல, எத்திஹாட் ஏர்வேஸ், ஏர் அரேபியா, விஸ் ஏர் அபுதாபி போன்ற விமான நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன.

தொழில்நுட்பர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், பொறியாளர்கள் போன்ற வேலைகளுக்கு அள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர் ஒருவரைப் பொறுத்தமட்டில், வானூர்திப் பொறியாளர் மாதம் 20,000 திர்ஹமும் விமானி ஏறக்குறைய 40,000 திர்ஹமும் சம்பளம் பெறலாம் என்கிறார்.

ஏஎஃப்எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேக்ஸிமிலியன் புவெர்கர், "விமான நிறுவனங்கள் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், 2023ஆம் ஆண்டு விமானிகளுக்கான மிகச்சிறந்த ஆண்டாக அமையும்.

"மத்திய கிழக்கிலும் இந்தியாவிலும் ஃபிளை துபாய், ஏர் அரேபியா, ஃபிளைநாஸ், இண்டிகோ, அகாஸா ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன," என்று சொன்னார்.

இதற்கிடையே, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் விமானியாவதில் இளையர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். துபாயில் எமிரேட்ஸ் விமானப் பயிற்சிக் கழகத்தில் 250க்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்துப் பல்கலைக்கழகத்தில் 1,600 பேர் சேர்ந்துள்ளனர்.