இந்திய சமையல்காரரின் துண்டிக்கப்பட்ட கைவிரல்களை மீண்டும் இணைத்த துபாய் மருத்துவர்கள்

இந்திய சமையல்காரரின் துண்டிக்கப்பட்ட கைவிரல்களை மீண்டும் இணைத்த துபாய் மருத்துவர்கள்

2 mins read
9a3e40e4-9d53-4e67-bab3-67a867d3e37d
தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருடன் சுதர்ஷன் சுப்பிரமணியன். படம்: கலீஜ் டைம்ஸ் -

துபாயில் பணிபுரியும் இந்திய சமையல்காரர் ஒருவர், நூடல்ஸ் அரியும் கருவியைத் துப்புரவு செய்து வேலை நாளைத் தொடங்கினார்.

எனினும், அந்தக் கருவியில் கத்தி பொருத்தப்பட்டிருந்ததைக் கவனிக்காத சுதர்ஷன் சுப்பிரமணியன், தமது வலது கையின் இரு விரல்களைத் துண்டித்துக்கொண்டார்.

"அது திடீரென நடந்துவிட்டது. ரத்தம் சிந்தியதை என்னால் பார்க்க முடிந்தது," என்றார் தமிழகத்தைச் சேர்ந்த அவர்.

ரத்தம் வெளியேறிய போதிலும், தமது விரல்களை இழந்துவிட்டதை அவர் முதலில் கவனிக்கவில்லை.

"நான் கைவிரலை ஆழமாக வெட்டிக்கொண்டேன் என நினைத்தேன். ஐஸ் கட்டிகளைக் கொண்டு ரத்தம் வடிவதை நிறுத்த என் சக ஊழியர்கள் முயற்சி செய்தனர்," என்றார் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு வந்த சுப்பிரமணியன், 25.

"அப்போதுதான் என் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதை நான் கவனித்தேன். அதைக் கண்டு நான் பதறினேன்," என்று அவர் சொன்னார்.

அவருடைய சக ஊழியர்கள் அரை மணி நேரத்திற்குள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துண்டிக்கப்பட்ட விரல்களை மீண்டும் இணைக்க சுப்பிரமணியனுக்கு 12 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஏஸ்டர் மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரான (plastic surgeon) டாக்டர் ராஜ்குமார் ராமச்சந்திரன், சுப்பிரமணியனின் ஆள்காட்டி விரல் நடுவிலிருந்து துண்டிக்கப்பட்டதாகக் கூறினார். அதேவேளையில், அவரது நடுவிரல், நுனியிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதனால், அறுவை சிகிச்சை சிக்கலாக இருந்தது.

"நுனியிலிருந்து விரல் துண்டிக்கப்பட்டால், எங்களால் ரத்த நாளங்களை இணைக்க இயலாது. ஆனால், இந்த அறுவை சிகிச்சையில் நாங்கள் அதை சரியாகச் செய்தோம்," என்றார் அவர்.

துண்டிக்கப்பட்ட விரல்களை மீண்டும் இணைப்பது சிக்கலானது என்று கூறிய டாக்டர் ராமச்சந்திரன், அறுவை சிகிச்சையை முடிப்பதற்கு பல மணி நேரம் ஆகும் என்றார்.

ரத்த நாளங்கள் ஒழுங்காக இணைக்கப்படவில்லை என்றால், ஒரு சில நாள்களில் விரல்கள் அழுகிவிடும். விரல் இணைக்கப்பட்ட பகுதியில் ரத்தம் உறைவதைத் தவிர்க்க, சுப்பிரமணியனுக்கு உறைவெதிர்ப்பி (blood thinner) கொடுக்கப்பட்டது.

பத்து நாள்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து அவர் வசிப்பிடம் திரும்பினார்.

"புண் ஆறி, விரல்கள் வழக்கம்போல இயங்குவதற்கு எட்டு முதல் 10 வாரங்கள் ஆகும் என மருத்துவர் என்னிடம் கூறினார்," என்றார் சுப்பிரமணியன்.