துபாய்: தங்களின் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ), ஈரானுடனான தங்களின் வர்த்தக, நிதிப் பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
அண்மைக் காலமாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஓரளவு அமைதி நிலவியது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சில காலமாக நிலவிய அமைதி
மத்திய கிழக்குப் பூசல் தொடங்கிய முதல் சில வாரங்களில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆக அதிகமான தாக்குல்களை எதிர்கொண்டன. அதற்குப் பிறகு கடந்த மே மாதம் முதல் அந்நாட்டைக் குறிவைத்து ஈரானிய ஏவுகணைகள் பாய்ச்சப்படவில்லை.
எனினும், ஈரான் தொடர்ந்து தங்களின் கப்பல்களைக் குறிவைத்துவருவதாக யுஏஇ அண்மை வாரங்களில் குற்றஞ்சாட்டி வருகிறது.
“வட்டார அளவில் பூசல் மோசமடைந்திருப்பதையடுத்து ஈரானுடனான எல்லா வர்த்தக நடவடிக்கைகள், வர்த்தகப் பரிமாற்றங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன,” என்று ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் வெளியுறவு அமைச்சின் தொடர்பு இயக்குநர் அஃபரா அல்-ஹமெலி தெரிவித்தார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஈரானிய சமூகம்
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் குறிப்பிடத்தக்க அளவில் ஈரானிய சமூகம் இருக்கிறது. அது, அமெரிக்கத் தடை உத்தரவுகளை எதிர்கொண்டுவரும் ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக இருந்துவந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்குப் பூசல் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்துக்கு இது பொருந்தும்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள இதர அண்டை நாடுகளைப் போல் ஈரானுக்கு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடம் ஆழமான கலாசார, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒற்றுமை இருக்கிறது.
அண்மைக் காலமாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஈரான்மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) இடம்பெற்ற இந்த அறிவிப்பு, அவற்றில் ஒன்றாகும்.
முன்னதாக மத்திய கிழக்குப் பூசல் தொடங்கிய காலத்தில் ஈரானுக்கான தனது தூதரை ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் மீட்டுக்கொண்டன. அத்துடன், ஈரானுடன் தொடர்புடைய பள்ளிகளையும் ஒரு மருத்துவமனையையும் அவை முடின.
கடந்த மார்ச் மாதம் போர் மிகவும் மோசமாக இருந்தபோது, துபாயில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய மருத்துவமனையை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் மூவர் இத்தகவலை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.


