தள்ளுபடி விலையில் விமானப் பயணச்சீட்டு விற்பனை அறிவிப்பு

1 mins read
c71aedb5-b57e-44bb-874f-1330ecbfd4c7
அபுதாபிக்கும் கோல்கத்தாவுக்கும் இடையே தினசரி விமானச் சேவைகளை எட்டிஹாட் ஏர்வேஸ் மீண்டும் தொடங்கியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அபுதாபியைத் தளமாகக் கொண்டுள்ள எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், கோடைக்கால விமானப் பயணச்சீட்டு விற்பனையை அறிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிடும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) பயணிகளை இலக்காகக் கொண்டு விமானப் பயணச்சீட்டு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருந்து இந்தியாவின் கோல்கத்தாவுக்கு சென்று வருவதற்கான 'இக்கானமி' பிரிவு இருவழி விமானப் பயணச்சீட்டின் விலை 995 திர்ஹமிலிருந்து (S$361) தொடங்குகிறது.

எகிப்துத் தலைநகர் கெய்ரோவுக்கு Dh1,195; பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு Dh2,395; சிங்கப்பூருக்கு Dh2,495; பாரிசுக்கு Dh2,595; லண்டனுக்கு Dh2,795 தொடக்கக் கட்டணங்களில் விமானப் பயணச்சீட்டு விற்கப்படுகின்றன.

மில்லியன் கணக்கான இந்திய நாட்டவர்கள் யுஏஇயில் வசித்து, வேலை செய்து வருவதால், யுஏஇ-இந்தியா பயணப்பாதை பரபரப்பான பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது.

அபுதாபி-கோல்கத்தா தினசரி விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

இந்நிலையில், அபுதாபிக்கும் கோல்கத்தாவுக்கும் இடையே தினசரி விமானச் சேவைகளை எட்டிஹாட் ஏர்வேஸ் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) மீண்டும் தொடங்கியுள்ளது.

மார்ச் 31ஆம் தேதிவரை சிறப்புக் கட்டணத்தில் பயணிகள் விமானப் பயணச்சீட்டுகளை வாங்கலாம். மே 1க்கும் ஜூன் 15க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பயணம் செய்யலாம்.

"கடைசி நேரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள பலரும் எண்ணுவர் என்பதை நாங்கள் அறிகிறோம். எனவேதான் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பல நகர்களுக்கு தள்ளுபடியான விலையில் விமானப் பயணச்சீட்டு விற்பனையை அறிவித்துள்ளோம்," என்று எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி ஆரிக் டி கூறினார்.