துபாய்: ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிடுவதற்கான அனைத்துலகச் செயற்குழுவில் தாங்கள் பங்கேற்க விரும்புவதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ), அமெரிக்கா உள்ளிட்ட தங்களின் மேற்கத்திய பங்காளி நாடுகளிடம் கூறியிருப்பதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் ஊடகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தது.
ஹோர்முஸ் பாதுகாப்புப் படை எனப்படும் படையை உருவாக்குவதற்கு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பல நாடுகளையும் ஊக்குவித்து வருகிறது.
ஈரானியத் தாக்குதல்களிலிருந்து ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதும் கப்பல்கள் அவ்வழியே பாதுகாப்பாகச் செல்ல வகைசெய்வதும் இலக்குகளாகும்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் இஸ்ரேல் உட்பட மற்ற எல்லா நாடுகளையும்விட ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்தான் அதிகமான ஈரானியத் தாக்குதல்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் தடையை நீக்க கப்பல்களை அனுப்பும் உடனடித் திட்டம் ஏதுமில்லை என்று அமெரிக்காவின் பங்காளி நாடுகள் பல தெரிவித்துள்ளன.
அந்த நீரிணையைத் திறந்துவிட உதவுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கோரிக்கையைப் பங்காளி நாடுகள் நிராகரித்தன.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் கிட்டத்தட்ட 35 நாடுகளுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரான்ஸ் வியாழக்கிழமை (மார்ச் 26) கூறியது.
அதற்கான பரிந்துரைகளை நாடவும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்ளவும் பிரான்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. எனினும், ஈரான் போர் முடிவுக்கு வந்த பிறகு ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில்தான் பிரான்ஸ் செயல்படுகிறது.

