UD10 தரநிலை மருத்துவ அதிகாரிகள் அக்டோபர் 7க்குள் பணியில் சேர வலியுறுத்து

UD10 தரநிலை மருத்துவ அதிகாரிகள் அக்டோபர் 7க்குள் பணியில் சேர வலியுறுத்து

படம்: ஃபிரீ மலேசியா

01 Oct 2026 - 5:27 pm

2 mins read

புத்ராஜெயா: இன்னும் பணியில் சேராத ‘UD10’ தரநிலை மருத்துவ அதிகாரிகளை, அக்டோபர் 7ஆம் தேதிக்குள் பணியில் சேருமாறு மலேசிய சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அந்த அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் மையங்களில் சேரவேண்டும் என்று அமைச்சு வியாழக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட்ட ‘UD10’ தரநிலை மருத்துவ அதிகாரிகளுக்கான பணி நியமன நடைமுறை (செப்டம்பர் 28, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில்) தற்போது நடைபெற்று வருகிறது.

“இக்கட்டத்தின் கீழ், மின்னணு பணி நியமன அமைப்பின் வாயிலாக மொத்தம் 4,255 மருத்துவ அதிகாரிகளுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அனைத்துத் தரப்பினரும் அவசரப்பட்டு முடிவுக்கு வராமல், பணி நியமன நடைமுறை சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.

இதற்கிடையே, சாபாவில் மருத்துவர் பற்றாக்குறை ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு பணிபுரிய நியமிக்கப்படும் வெளியூர் மருத்துவ அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகைகள், நலத்திட்டச் சலுகைகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிக்குச் சேர வேண்டிய 138 மருத்துவ அதிகாரிகளில் 47 பேர் மட்டுமே (சுமார் 34%) பணிக்கு வந்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுவதாக மருத்துவச் சங்கத்தின் சாபா கிளைத் தலைவர் டாக்டர் பிராண்டன் பேட்ரிக் செனகாங் தெரிவித்தார்.

“இப்புள்ளிவிவரங்கள் மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களை மட்டுமே உள்ளடக்கியவை. மாவட்ட சுகாதார அலுவலகங்கள் அல்லது அரசாங்க சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை,” என்று டாக்டர் பிராண்டன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பல துறைகளில் உள்ள மருத்துவ அதிகாரிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ‘ஆன்-கால்’ பணியைச் செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் மீதமுள்ள மருத்துவர்கள் தாங்க முடியாத பணிச்சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமை, பணியாளர் பற்றாக்குறை, சோர்வு, மன அழுத்தம், பணியாளர் விலகல் அதிகரிப்பு ஆகியவற்றின் ஒரு தீய சுழற்சியை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றும் இது இறுதியில் நீண்ட காத்திருப்பு நேரங்கள், சிகிச்சைத் தாமதங்கள் மூலம் நோயாளி பராமரிப்பைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்
தரநிலைபற்றாக்குறைசுகாதார அமைச்சு