லண்டன்: உலக சுகாதார நிறுவனத்தால் ‘எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நோய், கொவிட்-19 பரவலைவிட மோசமான பெருந்தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்று பிரிட்டிஷ் சுகாதார வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அது, 1919-20ஆம் ஆண்டுகளில் பரவிய ‘ஸ்பானிஷ் ஃபுளு’வைப் போன்றதொரு மோசமானதொரு விளைவை ஏற்படுத்தலாம் என்று கேட் பிங்கம் என்ற அவ்வல்லுநர் ‘டெய்லி மெயில்’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது தெரிவித்தார்.
திருவாட்டி பிங்கம், 2020 மே முதல் டிசம்பர்வரை பிரிட்டனின் தடுப்பூசிப் பணிக்குழுவின் தலைவராகச் செயல்பட்டவர்.
அனைத்துலக சுகாதார நிறுவனம் ‘எக்ஸ்’ நோய் குறித்து கடந்த மே மாதம் முதன்முதலாகத் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
அது வைரசாகவோ, பாக்டீரியமாகவோ அல்லது பூஞ்சையாகவோ இருக்கலாம் என்றும் அதற்கு இதுவரை சிகிச்சைமுறை கண்டறியப்படவில்லை என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
‘எக்ஸ்’ நோயின் மிரட்டலைச் சமாளிக்க, உலகில் பேரளவிலும் சாதனை நேரத்திலும் தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருவாட்டி பிங்கம் கூறியுள்ளார்.
அறிவியல் வல்லுநர்கள் 25 வைரஸ் குடும்பங்களைக் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட திரிபுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்றும் அவை ஓர் உயிரினத்திலிருந்து இன்னொன்றுக்குப் பரவும் வல்லமை படைத்திருக்கலாம் என்றும் சொன்னார்.
“கொவிட்-19 தொற்றால் உலகில் 20 மில்லியன் பேர் மாண்டுபோயினர். ஆனாலும், அதனால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் தேறிவிட்டதால் அவ்வகையில் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், ‘எக்ஸ்’ நோயின் பரவும் வேகம் தட்டம்மை போன்றும் உயிரிழப்பு விகிதம் இபோலா போன்றும் இருந்தால், பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கும்,” என்றார் திருவாட்டி பிங்கம்.

