லண்டன்: பிரிட்டனில் ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, மே 30ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
அங்கு 14 ஆண்டுகள் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்ததைத் தொடர்ந்து, இம்முறை தொழிற்கட்சி வெற்றிபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
650 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடங்கள் காலியான நிலையில், ஐந்து வாரப் பிரசாரங்கள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின.
பிரதமர் ரிஷி சுனக் மழையில் நனைந்து செய்த தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, முதல் வாரப் பிரசாரங்கள் சற்று வலுவிழந்து காணப்பட்டன. பல கவனிப்பாளர்கள் மழையைக் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர்.
தேர்தல் இவ்வாண்டு பிற்பகுதிக்கு பதிலாக ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்று திரு சுனக் அறிவித்தார்.
எதிர்த்தரப்பில் 14 ஆண்டுகள் இருந்த தொழிற்கட்சிக்கு, இப்போது அதன் தலைவரும், முன்னாள் மனித உரிமை வழக்கறிஞருமான கேர் ஸ்டார்மருடன் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளது.
தொழிற்கட்சியைக் காட்டிலும் ஈரிலக்க எண்கள் பின்தங்கியிருக்கும் ஆளுங்கட்சி, பெரிய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளியேற்றத்தைச் சந்தித்தது.
மீண்டும் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று ஏறக்குறைய 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். அவர்களில் 77 பேர் கன்சர்வேட்டிவ் கட்சியினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் திரு சுனக் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு, கன்சர்வேட்டிவ் கட்சியே ‘பாதுகாப்பான’ தெரிவு என்று கூறினார்.
கருத்துக் கணிப்புகளில் தொழிற்கட்சி சராசரியாக 45 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றது. ஆளுங்கட்சி 23 விழுக்காடு மட்டுமே பெற்றது.
இதனால், தொழிற் கட்சி மிகப் பெரிய அளவில் வெற்றிபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் மீண்டும் போட்டியிடும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் திடுதிடுப்பென்று ஜூலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது தொடர்பில் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில் அக்கட்சியில் உட்கட்சிப் பூசலும் தலைதூக்கியுள்ளது. இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலதுசாரி சீர்திருத்தக் கட்சி உறுப்பினரை ஆதரிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

