தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டனில் மோசமடையும் கலவரம்: அவசரக் கூட்டம் நடத்தவுள்ள பிரதமர் ஸ்டார்மர்

1 mins read
e7821d0c-8532-47d6-9b54-63af1f5aba2f
குடிநுழைவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறை நாய்கள் ஆடவர் ஒருவரை தாக்குகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பல நாள்களாக குடிநுழைவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மோசமடைந்துவரும் நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் கேர் ஸ்டார்மர் காவல்துறையினருடன் அவசரக் கூட்டம் நடத்தவிருக்கிறார்.

அந்த ஆர்ப்பாட்டங்களில் கட்டடங்களும் வாகனங்களும் தீயிடப்பட்டன. அடைக்கலம் நாடுவோர் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் குறிவைக்கப்பட்டன.

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட்டில், மூன்று பெண்கள் கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் நகரங்கள் முழுவதும் கலவரம் வெடித்தது.

இதுவரை 420 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய தாக்குதல்காரர் பிரிட்டனுக்குச் சென்றுள்ள இஸ்லாமியர் என்று தவறான தகவல்கள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, குடிநுழைவு எதிர்ப்புக் குழுவினரும், முஸ்லிம்களுக்கு எதிரான குழுவினரும் அந்தக் கொலையைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், அந்தச் சந்தேக நபர் பிரிட்டனில் பிறந்தவர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். அதனால் அதனைப் பயங்கரவாதச் சம்பவமாகக் கருதவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இனவெறுப்பைத் தூண்ட இந்தத் தருணத்தைப் பயன்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் யுவெட் கூப்பர் கூறினார்.

காவல்துறையினர் மீது செங்கற்கள் எறியப்பட்டன. கடைகளில் திருட்டுகள் நடந்தன. பள்ளிவாசல்களும் ஆசியர்களுக்குச் சொந்தனமான வர்த்தகங்களும் தாக்கப்பட்டன.

கடந்த வார இறுதியில், லிவர்பூல், பிரிஸ்டல், டேம்வர்த், மிடல்ஸ்பரோ உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் மூண்டது.

இணையத்தில் பரவிய தவறான தகவல்கள் அந்தக் கலவரத்துக்குக் காரணம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்