இருக்கைவார் அணியாமல் காரில் சென்ற பிரிட்டிஷ் பிரதமர்

இருக்கைவார் அணியாமல் காரில் சென்ற பிரிட்டிஷ் பிரதமர்

1 mins read
46522524-4876-4ecd-a21f-d547de5ccc81
தமது தவற்றை உணர்ந்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டார் பிரதமர் சுனக். படம்: ஏஎஃப்பி -

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் இருக்கைவார் அணியாமல் காரில் சென்ற காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காரின் பின்னிருக்கையில் இருக்கைவார் அணியாமல் அமர்ந்தபடி, நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான தமது கொள்கைகள் குறித்து பேசியபடி சென்றார் திரு சுனக். அவரது சமூக ஊடகப் பக்கங்களுக்காக அது காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டது.

இங்கிலாந்தில் இருக்கைவார் அணியத் தவறினால் 500 பவுண்டு (S$819) அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், பிரதமர் சுனக் இருக்கைவார் அணியாமல் காரில் சென்றது குறித்து தான் அறிந்துள்ளதாகவும் அதுபற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் லங்காஷியர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, திரு சுனக் தமது தவற்றை முழுமையாக ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறர்.

காணொளிப் பதிவிற்காகச் சிறிது நேரத்திற்கு அவர் இருக்கைவாரைக் கழற்றினார் என்றும் ஆனாலும் அவர் தமது தவற்றை ஒப்புக்கொண்டார் என்றும் அப்பேச்சாளர் கூறினார்.