லண்டன்: இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக இலங்கையின் மூன்று முன்னாள் மூத்த ராணுவத் தளபதிகளுக்கு எதிராக பிரிட்டன் பொருளியல் தடைகளை அறிவித்து உள்ளது.
முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதி ஒருவருக்கு எதிராகவும் அந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை ராணுவப் படையின் முன்னாள் தலைவர் ஷாவேந்திர சில்வ, முன்னாள் கடற்படைத் தளபதி வாசந்த கரன்னகோட, முன்னாள் ராணுவத் தளபதி ஜெகத் ஜயசூர்ய ஆகியோரோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனுக்கும் பிரிட்டன் தடை விதித்துள்ளது.
அந்த நால்வரும் பிரிட்டனுக்குள் நுழைய தடை விதிப்பதோடு சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளையும் பொருளியல் தடை உள்ளடக்கி உள்ளது.
உள்நாட்டுப் போர் மூள்வதற்கு முன்னதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய கருணா, இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்படும் துணை ராணுவக் குழு ஒன்றை வழிநடத்தினார்.

