உக்ரேன் மீண்டும் ரஷ்ய ஆலைகளைத் தாக்குவது அவமதிப்பான செயல்: டிரம்ப்

உக்ரேன் மீண்டும் ரஷ்ய ஆலைகளைத் தாக்குவது அவமதிப்பான செயல்: டிரம்ப்

படம்: புளூம்பெர்க்

16 Oct 2026 - 5:09 pm

2 mins read

வாஷிங்டன்: ரஷ்யாவின் சுத்திகரிப்பு ஆலைகள்மீது உக்ரேன் மீண்டும் தாக்குதல் நடத்துவது உலக அளவில் எரிசக்தி விலையை உயர்வாகவே வைத்திருக்கும் ஓர் அவமதிப்பான செயல் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (அக்டோபர் 15) ‘நியூஸ்மேக்ஸ்’ ஊடகத்தில் ஒளிபரப்பான நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

எரிசக்தி நிலையங்களைப் பாதுகாக்கும் வகையில் டிரம்ப் அறிவித்திருந்த சண்டைநிறுத்த உடன்படிக்கையைக் கைவிடுவதாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அண்மையில் அறிவித்திருந்தார். அதோடு, மாஸ்கோவுடன் உடன்படிக்கைகளைச் செய்ய டிரம்ப் காட்டும் ஆர்வத்தையும் அவர் குறைகூறினார்.

அதன் பின்னர், உக்ரேன் ரஷ்ய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றின்மீது தாக்குதல் நடத்தியது.

மாஸ்கோவுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய உதவும் அந்நகரின் தென்கிழக்கே அமைந்துள்ள ‘ரோஸ்நெஃப்ட்’ சுத்திகரிப்பு ஆலையை உக்ரேன் தாக்கியதைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், “அவர் (ஸெலென்ஸ்கி) செய்வதெல்லாம் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்துகிறது. அது உலக நாடுகளுக்குச் செய்யும் ஒரு பெரும் அவமதிப்பான செயல் என்று நினைக்கிறேன்,” எனக் கூறினார்.

“தாக்குவதற்குப் பல இடங்கள் உள்ளன; ஆனால், டீசல் தயாரிக்கப்படும் சுத்திகரிப்பு ஆலைகள்மீது தாக்குதல் நடத்தும்போது, அதுவும், டீசல் எண்ணெய் நமக்கும் உலகிற்கும் மிகவும் தேவைப்படும் ஒரு சூழலில், அவர் உலகுக்கு எந்தவொரு நல்ல செயலையும் செய்யவில்லை,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, ரஷ்யா, மின்நிலையங்கள் உள்ளிட்ட உக்ரேனின் எரிசக்தி வசதிகள்மீது ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. அதனால், உக்ரேனில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சார வசதியை இழந்தனர்.

இந்நிலையில்தான், உக்ரேன் பொறுமையை இழந்துவிட்டதாக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழிடம் திரு ஸெலென்ஸ்கி கூறினார்.

2022ல் ரஷ்யா உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் சண்டைநிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இருப்பினும், ஸெலென்ஸ்கியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளதாகவும் அதுவே அந்தப் பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதைச் சிரமமாக்குவதாகவும் டிரம்ப் நியூஸ்மேக்ஸ் நேர்காணலில் மீண்டும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்உக்ரேன்ரஷ்யா