உக்ரேன் உடன்பாடு: டிரம்ப், ஸியுடன் விவாதிக்கப் புட்டின் விருப்பம்

வால் ஸ்த்ரீட் ஜர்னல் அறிக்கை

உக்ரேன் உடன்பாடு: டிரம்ப், ஸியுடன் விவாதிக்கப் புட்டின் விருப்பம்

படம்: ராய்ட்டர்ஸ்

19 Oct 2026 - 2:21 pm

2 mins read

மாஸ்கோ: உக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனும் உச்சநிலை மாநாடு நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ர‌‌ஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி வால் ஸ்திரீட் ஜர்னல் நாளேடு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) இது குறித்து அறிக்கை வெளியிட்டது.

ரஷ்ய டீசலை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைத் திரு டிரம்ப் அறிவித்து, மாஸ்கோ மீதான முக்கியத் தடைகளைத் தளர்த்தும் உத்தரவில் அக்டோபர் 16ஆம் தேதி கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கும் திரு புட்டினுக்கும் இடையில் உறவு சீரடைந்துவரும் நிலையில் மாநாடு குறித்து முன்மொழியப்பட்டுள்ளது. 

இம்மாதம் 9ஆம் தேதி திரு டிரம்ப்புடன் திரு புட்டின் தொலைபேசியில் உரையாடியபோது இந்த ஆலோசனையை முன்வைத்தார் என்றும் அதன் விளைவாகவே இரு நாடுகளுக்கும் இடையில் டீசல் ஒப்பந்தம் எட்டப்பட்டது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

இது குறித்து கருத்துக் கேட்க ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு வெள்ளை மாளிகை உடனடியாகப் பதிலளிக்கவில்லை; அதே வேளையில், வழக்கமான வேலை நேரத்திற்கு அப்பால் என்பதால் கிரெம்ளினை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. வாஷிங்டனில் உள்ள ரஷ்ய, சீனத் தூதரகங்களும் உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

வரவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டிற்கு இடையே முத்தரப்புப் பேச்சை நடத்த கிரெம்ளின் பரிந்துரைத்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது.

அந்த உச்சநிலை மாநாடு, நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் ஷென்‌ஸென் நகரில் நடைபெறவிருக்கிறது.

உத்தேசச் சந்திப்புக் குறித்த விவாதம் நடைபெறுவதைக் கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நாளிதழிடம் உறுதிப்படுத்தினார்.

திரு புட்டினுடனான டீசல் ஒப்பந்தத்தையும் மாஸ்கோ மீதான தடைகளைத் தளர்த்தும் அமெரிக்க அதிபரின் உத்தரவையும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குறைகூறினார். இது ர‌‌ஷ்ய அதிபரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் போரை நீட்டிக்கச் செய்யும் என்றும் திரு ஸெலென்ஸ்கி எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாஅதிபர்புட்டின்அமெரிக்காடோனல்ட் டிரம்ப்சீனாஸி ஜின்பிங்உக்ரேன்உடன்பாடு