பாரிஸ்: உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி திங்கட்கிழமை (நவம்பர் 17) பின்னேரத்தில் பிரான்சுடன் ஆகாயத் தற்காப்பு தொடர்பான உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை உக்ரேனுக்கு விநியோகிப்பதற்கான உடன்பாடு அது.
ரஷ்யாவுடன் நீண்ட நெடுங்காலமாகப் போரிட்டு வரும் தனது ராணுவத்தின் ஆற்றலைப் பெருக்கும் முயற்சிகளில் ஒன்றாக விமானங்களையும் ஏவுகணைகளையும் பிரான்சிடம் இருந்துபெற உக்ரேன் முயன்று வருகிறது.
அண்மைய வாரங்களாக உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் ஏவி அது தனது தாக்குதலை வலுவாக்கி வருகிறது.
குறிப்பாக, தென்கிழக்கு உக்ரேனின் ஜபோரிஜ்ஜியா வட்டாரத்தில் தரைவழித் தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ அறிவித்துள்ளது.
போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் சென்றுள்ள திரு ஸெலென்ஸ்கி அங்கு அதிபர் இம்மானுவல் மேக்ரோனுடன் பேச்சு நடத்தினார்.
அதன் பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பிரான்சுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“உக்ரேனின் போர் விமானத் திறன்கள், ஆகாயத் தற்காப்புத் திறன்கள் ஆகியவற்றுடன் தற்காப்பு தொடர்பான இதர ஆற்றல்களையும் கணிசமாக வலுப்படுத்துவதற்கான உடன்பாடு அது. என்னுடைய பிரான்ஸ் வருகைக்கான பயணத் திட்டத்தின்படி திங்கட்கிழமை (நவம்பர் 17) அந்த உடன்பாடு கையெழுத்தாகும்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய அறிக்கையில் திரு ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனின் ஆகாயத் தற்காப்புக்கு கூடுதல் ராணுவ ஆதரவு வழங்குவதற்கான பேச்சுவார்த்தையில் கடந்த சில வாரங்களாக பிரான்ஸ் ஈடுபட்டு வருகிறது.
தமது சொந்த நாட்டில் அரசியல் மற்றும் வரவுசெலவுத் திட்டத்தில் உறுதியற்ற போக்கு காணப்படும் நிலையில், உண்மையில் உக்ரேனுக்கு எந்த அளவுக்கு மதிப்புள்ள உதவிகளை வழங்கமுடியும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் அவை.
உக்ரேனுக்கு உதவி வழங்கப்படும் என்று திரு மேக்ரோன் கடந்த மாதம் கூறியிருந்தார். மிராஜ் ரகத்தைச் சேர்ந்த ஆறு போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்க அவர் உறுதி தெரிவித்திருந்தார். பின்னர், தரையிலிருந்து விண்ணை நோக்கிப் பாயக்கூடிய ஏவுகணைகளை வழங்கவும் அவர் முன்வந்தார்.
இந்நிலையில், திரு ஸெலென்ஸ்கியின் பிரெஞ்சு வருகை உக்ரேனுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று விவரமறிந்த அதிகாரிகள் இருவர் ஊடகங்களிடம் கூறினர்.

