மாஸ்கோ: ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரேன் நடத்திய இரவுநேரத் தாக்குதலில் 85 வயது மூதாட்டி ஒருவர் மாண்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேனிய எல்லை அருகில் உள்ள குர்ஸ்க் நகர் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்தனர்.
அத்துடன் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
சேதமடைந்த கட்டடங்களில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றும் அடங்கும்.
பல வீடுகள் தீப்பிடித்து எரிந்ததாக குர்ஸ்க் நகரில் மேயர் செர்கே கோட்லியாரோவ் டெலிகிராம் செயலி மூலம் தெரிவித்தார்.
குடியிருப்பாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தையும் ஆளில்லா வானூர்திகள் தகர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் 11 கார்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை பாய்ச்சியது, குண்டு மழையும் பொழிந்தது.
இதில் 35 பேர் மாண்டதுடன் குறைந்தது 19 பேர் காயமடைந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் குர்ஸ்க் நகர் மீது உக்ரேன் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்தியுள்ளது.