தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் உக்ரேன்; போர் முடிந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் மக்கள்

ரஷ்ய அணுவுலை நிலையங்கள்மீது தாக்குதல் நடத்திய உக்ரேன்

3 mins read
a8bd5dd2-4451-4751-87cb-b633554d8cdc
ரஷ்யாவின் அணுவுலை நிலையங்கள், எரிசக்திக் கட்டமைப்புகள்மீது உக்ரேன் இரவு முழுதும் டிரோன் எனப்படும் ஆளில்லா வானுர்தி வழியாகத் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குள்ள எண்ணெய் நிலையங்களும் எரிசக்தி கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: இணையம்

மாஸ்கோ: ரஷ்யாவின் அணுவுலை நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள்மீது உக்ரேன் இரவு முழுதும் டிரோன் எனப்படும் ஆளில்லா வானூர்தி வழியாகத் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குள்ள எண்ணெய் நிலையங்களும் எரிசக்தி கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்தத் தாக்குதலால் கிர்ஸ்க் அணுமின்  நிலையத்தின் எரிசக்தி உற்பத்தி ஏறத்தாழ 50 விழுக்காட்டளவு சரிவைச் சந்தித்தது. மேலும், உஸ்ட் - லுகா துறைமுகத்தில் உள்ள எரிபொருள் முனையமும் தீப்பிடித்து எரிந்தது.

இத்தகவலை  ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்ட ரஷ்ய அதிகாரிகள், கிர்ஸ்க் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மின்மாற்றி சேதமடைந்ததால் அங்குள்ள நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் பாதியாகக் குறைந்து மூன்று நிலையங்களில் எரிபொருள் உற்பத்தி பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகக் கூறினர்.

உக்ரேன் நடத்திய இத்தாக்குதலில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் துரிதமாகச் செயல்பட்டு அதிகாரிகள் தீயை அணைத்துவிட்டனர் என்றும் அணுஉலை நிலையத்தின் செய்திப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள சுற்றுப்புறப் பகுதிகளில் கதிர்வீச்சு அளவுகள் நியமிக்கப்பட்ட வரையறைகளை மீறவில்லை என்றும் குறிப்பு சுட்டியது.

இதற்கிடையே, ரஷ்ய அணுஉலைகள், எரிபொருள் நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய உக்ரேனின் ஆளில்லா வானூர்தி கலன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அப்போது உடைந்து சிதறிய அதன் பாகங்கள் பிறநாடுகளுக்கு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ‘நோவாடெக்‘ செயல்பாட்டு முனையத்தில் தீச்சம்பவம்  ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் அதிகாரிகள் விவரித்தனர்.

இந்தத் தாக்குதல் குறித்து உக்ரேன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. ரஷ்ய உக்ரேன் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தை நோக்கி உக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோல் உக்ரேனின் பொருளியலை சீர்குலைக்கும் இலக்கில் ரஷ்யாவும் அதன் எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரேனுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய மன்னர் சார்ல்ஸ் 

இதற்கிடையே ஆகஸ்ட் 24 உக்ரேனின் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகச் சுதந்திரம் வேண்டிக் காத்திருந்த உக்ரேன் 1991ஆம் ஆண்டு தனி நாடாகத் தன்னை அறிவித்துக்கொண்டது.

உக்ரேனின் சுதந்திரப் பிரகடனத்தை சோவியத் ஒன்றியம் அதே ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி  அங்கீகரித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே, கனடாவின் பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை காலை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்க கியவ் சென்றடைந்தார். 

இருநாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திப்பர் என்றும் எதிர்பார்க்கப்படும் வேளையில், இருநாடுகளின் பரஸ்பர உறவுகுறித்து உக்ரேன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. உக்ரேன் அதிபரின் தலைமைச் செயலாளர் ஆண்ட்ரி எர்மக் சமூக ஊடகப் பதிவில், “உக்ரேனின் சுதந்திர தினமான இந்தச் சிறப்பு நாளில் நட்பு நாடுகளின் ஆதரவை உணர்வது எங்களுக்கு மிகவும் முக்கியம். அவ்வகையில் கனடா எப்போதும் எங்களுடன் துணைநிற்கிறது,”  என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கிலாந்து அரசர் சார்ல்ஸ் உக்ரேனிய மக்களுக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தையும் அதிபர் ஸெலென்ஸ்கி பகிர்ந்துகொண்டார்.

“உக்ரேன் மக்களின் அசைக்க முடியாத மனப்பான்மையைப் பேரளவில்  வியந்து பார்ப்பதாகக் கூறிய அரசர், நியாயமான நீடித்த அமைதியைப் பேணிட தம் நாடுகள் இன்னும் அணுக்கமாக இணைந்து செயலாற்ற இயலும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசர் சார்ல்ஸின் இந்த வாழ்த்து மடல்குறித்து கருத்துரைத்த அதிபர் ஸெலென்ஸ்கி, அதில் உள்ள கனிவான வார்த்தைகள் யுத்தம் நடக்கும் இந்தக் கடினமான நேரத்தில் தங்கள் மக்களுக்கு  ஊக்கமிகு எழுச்சியை அளிப்பதாக உள்ளது,’’என்றார்.

குறிப்புச் சொற்கள்