சோல்: உக்ரேன் - ரஷ்யப் போரில் பணியில் அமர்த்தப்பட்ட வடகொரிய ராணுவ வீரர்கள் இருவர் தாங்கள் ராணுவப் பயிற்சியில் பங்கெடுக்கின்றனர் என்றும் போரில் அல்ல என்றும் நம்பியதாக தென்கொரிய தேசிய புலனாய்வுச் சேவை கூறியிருக்கிறது.
மேற்கு ரஷ்யாவின் ‘குர்ஸ்க்’ வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) உக்ரேனிய ராணுவப் படையினரால் பிடிபட்ட அந்த வடகொரிய ராணுவ வீரர்கள் தற்போது உக்ரேனிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
தடுத்துவைக்கப்பட்டோரில் ஒருவர் தாங்கள் சென்ற ஆண்டு நவம்பரில் ரஷ்யா சென்றதாகவும் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதற்கு முன்னர் ரஷ்ய ராணுவ அதிகாரிகளின்கீழ் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறியதாக தென்கொரிய புலனாய்வுச் சேவை தெரிவித்தது.
தாம் ராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ளப்போவதாக நம்பியதாகவும் ரஷ்யா சென்றடைந்த பிறகு மட்டும்தான் அது போர் என்று தாம் உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
பிடிபட்ட இரண்டு ராணுவ வீரர்களுக்கும் வயது 20, 26. அவர்கள் மேல் விசாரணைக்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் கியவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். தாடையில் காயங்கள், முறிந்தபோன கால், கட்டுப்போட்ட கை எனக் காயங்கள் ஏற்பட்டுள்ளபோதும், அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யப் படைகளை வலுவாக்க, வடகொரியா 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அங்கு அனுப்பியுள்ளதாக உக்ரேன், அமெரிக்கா, தென்கொரியா ஆகியவை குறைகூறி வருகின்றன.