கியவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கை குறித்து உக்ரேன் அதன் நட்பு நாடுகளுடன் சனிக்கிழமை (ஜனவரி 3) பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில் 15க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், நேட்டோ அமைப்பு அதிகாரிகள் ஆகியோரும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அமெரிக்கப் பிரதிநிதிகள் இணையம் வழி கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் அடுத்த வாரம் பிரான்சில் நடக்கும் மற்றொரு சந்திப்பிலும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
ரஷ்யா 2022ஆம் ஆண்டு உக்ரேன்மீது போர் தொடுத்தது. அதன் பின்னர் இரண்டு நாடுகளிலும் பல உயிரிழப்புகளும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

