வாஷிங்டன்: உக்ரேன், தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே உக்ரேன், ஜனநாயக நாடுதானா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைத் திரு டிரம்ப் மீண்டும் கடுமையாகக் குறைகூறினார்.
அதிபர் தேர்தலைத் தவிர்ப்பதற்குப் போரைக் கீவ் ஒரு காரணமாய்ப் பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். பொலிட்டிக்கோ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அமெரிக்க அதிபர் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
ரஷ்யா 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரேன்மீது படையெடுத்தது. அதன் பின்னர் உக்ரேனில் ராணுவச் சட்டம் நடப்புக்கு வந்தது. அதன்கீழ், அங்குத் தேர்தல் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
“தேர்தல் நடத்துவதற்கு இது முக்கியமான நேரம் என்று நினைக்கிறேன். தேர்தலை நடத்தாமல் இருக்க அவர்கள் போரை ஒரு காரணமாகப் பயன்படுத்துகிறார்கள். உக்ரேனிய மக்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்,” என்றார் திரு டிரம்ப். ராணுவச் சட்டம் நடப்பில் இல்லையென்றால், உக்ரேனில் அதிபர் தேர்தல் சென்ற ஆண்டு (2024) மார்ச் மாதத்திற்குள் நடந்திருக்க வேண்டும். ரஷ்ய-உக்ரேனியப் போரை நிறுத்துவதற்கான அமைதித் திட்டத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளது. ஆனால் அந்தத் திட்டத்தை உக்ரேனிய அதிபர் படித்துப் பார்க்கவில்லை என்கிறார் திரு டிரம்ப். அதிகமானோர் மாண்டுபோவதாகக் கூறிய அமெரிக்க அதிபர், திட்டத்தைத் திரு ஸெலென்ஸ்கி படிப்பது நல்லது என்றார். அமெரிக்க-உக்ரேனிய அதிகாரிகளுக்கு இடையில் நாள் கணக்கில் தொடர்ந்த சமரசப் பேச்சுகள் சனிக்கிழமை (டிசம்பர் 6) முடிவுற்றன. அவற்றில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையான அமைதியை எட்ட மேலும் பேச்சுகள் நடத்தத் தயாராய் இருப்பதாகக் கூறுகிறார் திரு ஸெலென்ஸ்கி. பூசலில் மாஸ்கோவின் கை ஓங்கியிருப்பதாகத் திரு டிரம்ப் கூறினார். உக்ரேன், போரில் தோல்வியடைந்துவிட்டதா என்ற கேள்விக்கும் அவர் பதில் தந்தார்.
“நான் வருவதற்கு நெடுங்காலம் முன்பே, அவர்கள் நிலப்பகுதியை இழந்துவிட்டனர்,” என்று திரு டிரம்ப் கூறினார். உக்ரேனின் இழப்பு, கடந்த 10 மாதத்தில் தொடர்ந்ததாகவும் அவர் சொன்னார்.

