கியவ்: ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பிலான பேச்சை வரும் அக்டோபரில் தொடங்க உக்ரேன் ஆயத்தமாகிவருவதாக அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நிர்வாகம் கூறியிருக்கிறது.
ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருவதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நிர்வாகத்தின் தலைமை அதிகாரி கிரிலோ புடானோவ் தெரிவித்தார்.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்து நாலரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
“அக்டோபருக்காக நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம்,” என்று திரு.புடானோவ் கூறினார்.
அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்கோஃபும் ஜாரெட் குஷ்னரும் மாஸ்கோவிலும் கியவிலும் பேச்சு நடத்திய சில நாள்களுக்குப் பிறகு திரு.புடானோவின் கருத்து வந்துள்ளது.
பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அவர்கள் மாஸ்கோவுக்கு உக்ரேனியத் தலைநகருக்கும் மேற்கொண்ட முதல் பயணம் அது. இதற்கு முன்னர் முத்தரப்புச் சந்திப்பு பிப்ரவரியில் ஜெனீவாவில் நடைபெற்றது.
ஈரான் போரில் கவனம் செலுத்தியதால் அமெரிக்கா தலைமையிலான அரசதந்திர முயற்சிகள் தொய்வடைந்திருந்தன.
இரு தலைநகரங்களுக்கும் பயணம் செய்த பிறகு பேசிய விட்கோஃப், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள புதிய வேகத்தை இருதரப்பும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
தூதர்கள் இருவரும் மிகச் சிறந்த, பயனுள்ள சில யோசனைகளை முன்வைத்துள்ளதாகத் திரு.ஸெலென்ஸ்கி கூறினார். புதிய முத்தரப்புச் சந்திப்பை துருக்கி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சுவிட்சர்லாந்து அல்லது வேறு நாடுகள் நடத்தக்கூடும் என்றும் அவர் கோடிகாட்டியிருந்தார்.
அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்குவதை மாஸ்கோ நிராகரிக்கவில்லை என்று கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் எப்போது, எங்கு நடைபெறும் என்பதை இப்போது சொல்வதற்கில்லை என்றார் அவர்.

