உக்ரேன்: ரஷ்யா உக்ரேன் மீது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது முதல் அந்நாட்டுக் கிழக்குப் பகுதி மக்கள் ரஷ்ய குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டவர்கள்.
ஆனால், மார்ச் மாதம் 7ஆம் தேதி ரஷ்யா மேற்கொண்ட கொத்துக்குண்டுவீச்சுத் தாக்குதல் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான, அதிர்ச்சி தரும் அனுபவம்.
டொனெட்ஸ்க் வட்டாரத்தின் மையத்தில் இருக்கும் டோபிரோபில்லா நகரை நோக்கி ரஷ்யா மேற்கொண்ட கொத்தாக விழுந்து, சிதறுண்டு பரவலாக வெடிக்கும் குண்டுகளை கொண்ட அந்தத் தாக்குதல் 11 பேரைக் கொன்றதுடன் மேலும் 40 பேருக்கு காயம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆறு சிறுவர்களும் அடக்கம் என்று உக்ரேன் நாட்டு அவசரநிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.
“உலகம் அழிந்துவிடப் போவது போன்ற தாக்குதல் அது,” என்று குருதி தோய்ந்த தலைக்கட்டுடன் இர்னா கோஸ்டென்கோ என்ற 59 வயது மாது கூறினார்.
“தொடக்கமாக இரவில் ஒரு மந்தமான ஒலி எழுந்தது. பின்னர், தமது கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த சந்தைப் பகுதி வெடித்தது,” என்று அவர் விளக்கினார்.
வானில் வெடித்து பல சிறிய குண்டுகளாக பரவலாக சிதறும் இந்தக் கொத்துக்குண்டுகள் மிகுந்த நாசத்தை விளைவிக்கக்கூடியவை என்று கூறப்படுகிறது. இந்த குண்டுகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அனைத்துலக ஒப்பந்தத்தில் ரஷ்யா, உக்ரேன் இரு நாடுகளுமே கையெழுத்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தனது அக்கம்பக்கத்தார் பலர் இந்தத் தாக்குதலில் மாண்டதாகக் இர்னா கோஸ்டென்கோ கூறுகிறார். அவர்களின் உடல்களை தான் பார்த்ததாக இவர் தெரிவிக்கிறார்.
“அந்த ரத்தம், ரத்தம் உறைந்த நிலையில் உடல்கள், நேரே தலையில் விழுந்த குண்டு. அது மிகவும் கொடூரமானது,” என்று கட்டடத்தில் ஏற்பட்ட சேதத்தை வெறித்துப் பார்த்தபடி இர்னா கோஸ்டென்கோ சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்வெட்லானா என்ற தான் வசித்த கட்டடத்தில் வசித்த மற்றொரு மாது இறந்து காணப்பட்டதாகவும் அவர் உடல் போர்த்தி வைக்கப்பட்டதாகவும் இவர் கூறுகிறார்.
இந்நிலையில், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அடுத்த வாரம் சவூதி அரேபியாவில் அமெரிக்கப் பிரிதிநிதிகளுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமது நாடு ஆக்கபூர்வமாக செயல்படும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

