கியவ்: உக்ரேனின் அரசாங்கச் சேமிப்பு வங்கி ஊழியர்கள் எழுவரை ஹங்கேரி தடுத்துவைத்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆஸ்திரியாவிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஹங்கேரி வழியாக உக்ரேனுக்குத் திரும்பியபோது அவர்களைப் பிடித்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹங்கேரியிலுள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்ய எண்ணெயைக் கொண்டுசெல்லும் ‘துருஷ்பா’ (Druzhba) குழாய்த்தடத்தை மீண்டும் திறக்க உக்ரேனை வற்புறுத்துவோம் என ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பான் தெரிவித்திருந்தார்.
அதற்காக ‘பொருளியல் மற்றும் அரசியல் கருவிகளை’ பயன்படுத்துவோம் என அவர் கூறியிருந்த நிலையில், உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஹா, இரு கார்களில் பயணம் செய்த வங்கி ஊழியர்கள் ஹங்கேரிக்குள் நுழைந்தபோது தடுத்துவைக்கப்பட்டனர் என்றும் தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“உண்மையில், மக்களை ஹங்கேரி பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொண்டு பணத்தைத் திருடுகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
“திரு ஓர்பான் முன்னரே அறிவித்த அந்த ‘வலிமை’ இதுதான் என்றால், இது ஒரு குற்றக் கும்பலின் செயல். இது அரச பயங்கரவாதம், மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்,” என்றும் திரு சிபிஹா கடுமையாகச் சாடியுள்ளார்.

