தென்கொரியாவிடம் ஆயுத உதவி கோரும் உக்ரேன்

2 mins read
உக்ரேனியப் பேராளர் குழு சோல் செல்வதாக ஊடகத் தகவல்
bb912a22-75d0-4bb6-b4be-7dedf9d93a49
உக்ரேனியத் தற்காப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ். - படம்: ஏஎஃப்பி

சோல்: உக்ரேனியத் தற்காப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான பேராளர் குழு, ஆயுத உதவி கோரி இந்த வாரம் தென்கொரியா செல்வதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை அக்குழுவினர் கோருவர் என்று கூறப்படுகிறது.

உக்ரேனில் நடைபெறும் போர் குறித்துத் தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஷின் வோன்-சிக்கிடம் அவர்கள் கலந்துரையாடியதாக டோங்கா இல்போ நாளேடு, நவம்பர் 27ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, கடந்த அக்டோபர் மாதம் தென்கொரிய ஒலிபரப்புக் கழகத்துக்கு வழங்கிய நேர்காணலில், தென்கொரியாவிடம் ஆயுத ஆதரவு கோரி விளக்கமான கோரிக்கையை அனுப்பவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பீரங்கிகள், ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை வழங்கக் கோரவிருப்பதாக அவர் சொன்னார்.

உக்ரேனியப் பேராளர் குழு இந்த வாரம் தென்கொரியா சென்று ஆயுத உதவி கோரவிருப்பதாகச் சீனாவின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேடும் தகவல் வெளியிட்டுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி, உக்ரேனியப் பேராளர்கள் தென்கொரிய அதிகாரிகளைச் சந்திப்பர் என்று அது கூறியது.

நவம்பர் 26ஆம் தேதி இடம்பெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் உக்ரேனியப் பேராளர் குழு சோல் வந்தடைந்துவிட்டதா என்ற கேள்விக்குத் தென்கொரியத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

வடகொரியா ரஷ்யாவுக்கு உதவுவதற்குப் பதிலடியாகத் தென்கொரியா உக்ரேனுக்கு ஆயுதம் அனுப்புமா என்று, நவம்பர் மாதத் தொடக்கத்தில் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ டே-யுல்லிடம் கேட்கப்பட்டது. அனைத்து சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்படுவதாக அவர் அதற்குப் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்