உலகத் தலைவர்களை ஈர்க்கும் உக்ரேன் உச்சநிலை மாநாடு

2 mins read
c5977902-980f-4e36-b89f-d5c1e60f95de
உக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி, ஜெர்மனியில் உள்ள ராணுவப் பயிற்சியிடம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோது ராணுவ வீரர்களுடன் உரையாடினார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஸுரிக்/கீவ்: இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாடு ஒன்றில் உக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கியுடன் உலகத் தலைவர்களும் கலந்துகொள்வார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பாவில் நிலவும் ஆக மோசமான சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை ஆராய அந்த மாநாடு நடைபெறுகிறது.

இருப்பினும், மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜூன் 15 முதல் ஜூன் 16 வரை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வோரில், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரொன், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர்.

உச்சநிலை மாநாடு சுவிட்சர்லாந்தின் ‘புவர்கன்ஸ்டொக்’ உல்லாசத் தலத்தில் நடைபெறவிருக்கிறது.

பொருளியல் தடைகளின் தொடர்பில், மாஸ்கோவுக்கு உதவிய இந்தியா, பேராளர் குழு ஒன்றை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுடன் நட்பார்ந்த உறவைக் கட்டிக்காக்கும் துருக்கியையும், ஹங்கேரியையும் அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதிநிதிப்பார்கள்.

இருப்பினும், சில நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டா. அவற்றில் சீனாவும் ஒன்று. ரஷ்ய எண்ணெய்யைப் பெறும் முக்கியப் பயனீட்டாளரான சீனா, மாஸ்கோ அதன் உற்பத்தித் தளத்தைக் கட்டிக்காக்க உதவுகிறது.

தற்போது போர் மூன்றாவது ஆண்டாகத் தொடர்வதால், அனைத்துலக ஆதரவைக் கட்டிக்காப்பதில் சவால் உள்ளதை திரு ஸெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.

“பங்காளிகளாக இருக்கும் நாடுகளையும், பங்காளிகளாக இல்லாத நாடுகளையும் ஒன்றிணைப்பது உக்ரேனுக்குச் சிரமமான ஒரு பணி,” என்று அவர் சொன்னார்.

மாநாட்டுக்கான ஆயத்தங்கள் குறித்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் கலந்துபேச திரு ஸெலென்ஸ்கி புதன்கிழமையன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார். இருப்பினும், சவூதி அரேபியா, பிரதிநிதியை அனுப்புமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில், தனக்கு அழைப்பு விடுக்கப்படாத ஒரு மாநாடு பயனற்றதாக இருக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்