கியவ்: ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட தமது குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் உக்ரேன் மீண்டும் இறங்கியுள்ளது.
உக்ரேனியர் 1,200 பேரை மீட்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அந்தத் தகவலை டெலிகிராம் சமூக ஊடகத்தில் காணொளியாக அவர் வெளியிட்டார்.
“ரஷ்ய சிறையில் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. அதிக அளவில் பேச்சுவார்த்தை இடம்பெறும்,” என்று திரு ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) பதிவிட்ட காணொளியில் குறிப்பிட்டார்.
உக்ரேனின் பாதுகாப்புத்துறைத் தலைவர் ருஸ்டம் உமராவும் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
“துருக்கி, ஐக்கிய அரச் சிற்றரசுகளுடன் உக்ரேன் பேசியுள்ளது. பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டது. 1,200 உக்ரேனியர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்,” என்றார் அவர்.
உக்ரேனியர்களை விடுதலை செய்வது குறித்து ரஷ்யா அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
2022ஆம் ஆண்டு உக்ரேன், ரஷ்யா நாடுகளில் தடுத்துவைக்கப்பட்ட தத்தம் குடிமக்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள துருக்கி உதவி புரிந்தது. அதன்பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பினர்.

