வாஷிங்டன்: உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், மருமகன் ஜெரெட் குஷ்னரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்து கலந்துரையாட இருக்கின்றன.
உக்ரேன் - ரஷ்யா போர் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால் அவர் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அமெரிக்கா தயாரித்திருந்த அமைதிப் பரிந்துரைகளின் நகல் தொடர்பான விவரங்கள் கடந்த வாரம் வெளியே கசிந்தன.ு.
அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவை ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு தலை வணங்கும் வகையில் இருந்ததாக உக்ரேனிய, ஐரோப்பிய அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதி தனது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும், உக்ரேனிய ராணுவம் மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் போன்ற ரஷ்ய நிபந்தனைகளுக்கு அந்தப் பரிந்துரைகள் இணங்கியது போல தோன்றியதாக அதிகாரிகள் கூறினர்.
ஐரோப்பிய நாடுகள் மாற்றுப் பரிந்துரைகளை முன்வைத்தன.
இதற்கு உக்ரேனிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
எதிர்கால ஒப்பந்தங்களுக்கு அடிப்படையான பரிந்துரைகள் தொடர்பாகக் கலந்துரையாடல் நடைபெறுவதாக ரஷ்ய அதிபர் புட்டின் கடந்த வாரம் தெரிவித்தார்.
புட்டின் - விட்கோஃப் சந்திப்பு ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) பிற்பாதியில் நடைபெறும் என்று ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
விட்கோஃபுடன் இணைந்து குஷ்னரும் அதிபர் புட்டினைச் சந்திக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் புட்டின் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரேன் மறுத்தால் உக்ரேனின் மேலும் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

