கியவ்: உக்ரேன் வீரர்கள் முதல் முறையாக வடகொரிய வீரர்களுடன் மோதியிருக்கின்றனர் என்று உக்ரேனின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய கேபிஎஸ் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் உக்ரேனியத் தற்காப்பு அமைச்சர் ரஸ்டெம் உமெரோவ் இதனை தெரிவித்தார்.
சிறிய வடகொரிய வீரர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வடகொரிய வீரர்களை ரஷ்யாவுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கு மேற்கு நாடுகள் பதில் எதுவும் தெரிவிக்காததால் உக்ரேனியத் தலைவர் ஸெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக உக்ரேனிய வீரர்களுடன் வடகொரிய துருப்புகள் மோதியிருக்கின்றன. இதனால் நிலையற்ற உலகுக்கு வடகொரியா புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருப்பதாக ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
ஆனால் நேரடியாக வடகொரிய வீரர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பதை தென்கொரியா நம்பவில்லை.
சிறிய அளவில் வடகொரிய வீரர்களுடன் ஏதாவது சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று தென்கொரியா கூறியுள்ளது.