வாஷிங்டன்:அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உக்ரேன்-ரஷ்ய போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போவதில்லை என்று ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மூவாண்டுக்கும் மேலாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் எப்படி உதவலாம் என்பதுதான் அமெரிக்க நிர்வாகம் தற்போது எதிர்கொள்ளும் கேள்வி என்று அவர் கூறினார்.
இருப்பினும் திரு வான்ஸ், “பயங்கரமான பூசலை நிறுத்துவதும் உடன்பாட்டை எட்டுவதும் ரஷ்யா, உக்ரேன் கைகளில்தான் இருக்கிறது,” என்றார்.
உக்ரேன் போர் குறித்த திரு டிரம்ப்பின் அணுகுமுறையைத் திரு வான்ஸ் தற்காத்துப் பேசினார்.
“உக்ரேனியர்கள் ஆக்கிரமிப்பு குறித்து சினமடைந்துள்ளனர்,” என்ற அவர், “ஒருசில மைல் ஆக்கிரமிப்பால் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களைத் தொடர்ந்து இழக்கப்போகிறோம்,” என்றார்.
சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்ட 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரைமியாவை விட்டுக்கொடுக்க உக்ரேன் முன்வரலாம் என்று இந்த வாரத் தொடக்கத்தில் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
ஆனால், உக்ரேனிய அரசமைப்பைச் சுட்டிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கிரைமியாவை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.
ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் கொடுத்த வேறொரு பேட்டியில், போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிறுத்தப்படாவிட்டால் எவ்வளவு காலத்தை அதெற்கென ஒதுக்க வேண்டும் என்று திரு டிரம்ப் முடிவெடுக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இரண்டாம் உலகப் போரின் முடிவை அனுசரிக்கும் வகையில் அடுத்த வாரம் மே 8ஆம் தேதியிலிருந்து மூன்று நாள் தற்காலிக சண்டைநிறுத்தத்தை இந்த வாரம் அறிவித்தார்.
அதற்குப் பதிலாக 30 நாள் சண்டையை நிறுத்தும்படி உக்ரேனின் வெளியுறவு அமைச்சர் அன்டிரி சிபிஹா கூறினார்.
ஆனால் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான சண்டை தொடர்கிறது.
வியாழக்கிழமை இரவு உக்ரேனின் ஸப்போரிக்சியா நகர் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர்.
உக்ரேனும் பதிலுக்கு ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என்று ரஷ்யா கூறியது.

