உக்ரேன் ராணுவத் தளபதி பதவிநீக்கம் செய்யப்பட்டார்

உக்ரேன் ராணுவத் தளபதி பதவிநீக்கம் செய்யப்பட்டார்

2 mins read
13784608-99f7-4034-b48a-5f37b37ce1a4
ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கு (இடது) பதிலாகக் கூட்டுப் படைகளின் தளபதி மைக்கைலோ டிராபட்டி, உக்ரேனின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். - படங்கள்: ஏஎஃப்பி

கியவ்: உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) சோவியட் காலத்தில் பயிற்சிபெற்ற தனது ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியைப் பதவிநீக்கம் செய்துள்ளார்.

பிரபல, இளம், தொழில்நுட்பத் திறன் கொண்ட தற்காப்பு அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, உக்ரேன் அதிபர் அந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

சிர்ஸ்கிக்குப் பதிலாகக் கூட்டுப் படைகளின் தளபதியான மைக்கைலோ டிராபட்டியை நியமிப்பதாக உக்ரேன் தலைவர் அறிவித்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டுமுதல் சிர்ஸ்கி, 60, அந்தப் பொறுப்பில் பணியாற்றி வந்தார். 2022ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில், கியவ் நகரின் தற்காப்புக்குத் தலைமைதாங்கியவர் அவர்.

கியவ் நகரின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதிகளில் அவரும் ஒருவர்.

பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட தற்காப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவுக்கு ஆதரவாக, பல நாள்கள் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அவரது பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது. சிர்ஸ்கி தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் ராணுவத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியைத் தடுத்ததாகவும் ஃபெடோரோ குற்றம் சாட்டியிருந்தார்.

“உக்ரேன் ஆயுதப்படையின் புதிய தலைமைத் தளபதியாக மைக்கைலோ டிராபட்டியை நியமிக்க முடிவு செய்துள்ளேன்,” என்று திரு ஸெலென்ஸ்கி டெலிகிராம் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

“ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், முன்னிலையில் நின்று உக்ரேனுக்காக உழைத்த நமது ஒவ்வொரு வீரருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் அவர்.

இந்நிலையில், இவ்வாண்டு உக்ரேன் அதன் 700 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீட்டெடுத்துள்ளது என்று பதவியிலிருந்து விலகும் ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், தான் தமது உயரிய ராணுவப் பொறுப்பிலிருந்து விலகுவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

“தற்காப்பை மட்டுமே தாங்கிப் பிடிக்கும் ராணுவமாக மட்டுமல்லாமல், எதிர்த்துத் தாக்குதல் நடத்தும் நிலையில் உள்ள ஒரு ராணுவத்தை அடுத்தவரிடம் நான் ஒப்படைக்கிறேன்,” என்று சிர்ஸ்கி டெலிகிராம் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்