தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில் உக்ரேனுக்கு சிக்கல்கள்

2 mins read
a1b2d5f1-01df-442b-97e8-2e2f885d41b9
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய உக்ரேனுக்கு ஹங்கேரி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. - கோப்புப் படம்: ஊடகம்

கியவ்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய உக்ரேன் இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்று ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அண்மையில் உக்ரேன் சென்றிருந்த அந்த அதிகாரிகளில் ஒருவரான திருவாட்டி மார்ட்டா கோஸ், மேற்கு உக்ரேனில் வசிக்கும் ஹங்கேரிய சிறுபான்மை மக்களைச் சந்தித்துப் பேசினார். உக்ரேனுக்கு எதிராக அவர்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பை தணிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் இணைய ஹங்கேரி எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறது. உக்ரேனில் வசிக்கும் ஹங்கேரி இன மக்களின் மொழி உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் மேலும் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் ஹங்கேரி தனது எதிர்ப்புக்கான காரணங்களை அடுக்குகிறது.

ஹங்கேரியின் எதிர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 27 நாடுகளின் ஆதரவுடன் ஒன்றியத்தில் இணைய உக்ரேன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், ஹங்கேரியின் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, உக்ரேன் தன்னைத் தானே சரிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்று திருவாட்டி கோஸ் கூறியுள்ளார்.

வேளாண்மை முதல் சுற்றுச்சூழல் வரை ஏராளமான சீர்திருத்தங்களை உக்ரேன் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றார் அவர்.

மேலும், “ஒன்றியம் வகுத்துள்ள சட்டவிதிகளுக்கு நூறு விழுக்காடு உட்பட்டு நடக்கும் நாடுகள் மட்டுமே ஒன்றியத்தில் இணைய முடியும். உக்ரேன் அதேபோல செயல்பட்டு ஒன்றிய விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் திருவாட்டி கோஸ் தெரிவித்தார்.

அண்மையில் உக்ரேன் சென்றிருந்த ஒன்றியத்தின் அதிகாரிகள் அந்தக் கருத்தையே ஒருசேர ஒலிக்கின்றனர்.

உக்ரேன் தனது நாட்டைச் சீர்திருத்துவதில் உறுதியுடன் இருந்து, ஒன்றியத்தின் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்தால் உக்ரேனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஓர்பானை தங்களால் சரிக்கட்டிவிட முடியும் எனற அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்வாறு செய்யாவிடில் ஒன்றியத்துடன் உக்ரேன் இணைவது கடினமாகிவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்