கியவ்: ரஷ்ய அதிபர் புட்டின் ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு போர்நிறுத்த அறிவிப்பு செய்துள்ளபோதும் உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்வதாக உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புட்டின் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக போர் நிறுத்த அறிவிப்பு விடுத்தபோதிலும் போர்ப் பகுதிகளில் ரஷ்ய பீரங்கியுடன், மற்ற தாக்குதல்கள் தொடர்வதாக ஸெலன்ஸ்கி கூறினார்.
போர் தொடங்கி மூன்றாண்டுகளாகத் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் அறிவித்துள்ள 30 மணிநேர போர் நிறுத்தம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், போர் நிறுத்த அறிவிப்பு வந்த சில மணிநேரங்களிலேயே ஆகாயத் தாக்குதலை அறிவிக்கும் எச்சரிக்கை ஒலி, தலைநகர் கியவ் உட்பட பல உக்ரேனியப் பகுதிகளில் ஒலித்ததாக கூறப்படுகிறது.
“பல போர்ப் பகுதிகளில் ரஷ்யாவின் 59 பீரங்கித் தாக்குதலுடன் மற்ற ரஷ்யப் படைகளின் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றன என்று உக்ரேனிய தலைமைத் தளபதி அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி அதிபர் ஸெலன்ஸ்கி விளக்கினார்.
ஏப்ரல் 19ஆம் தேதி நள்ளிரவு வரையிலான காலகட்டத்தில் 387 ரஷ்யத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் 19 முறை ரஷ்யப் படைகள் நேரடித் தாக்குதல் மேற்கொண்டதாகவும் 290 முறை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் திரு ஸெலன்ஸ்கி கூறினார்.