உக்ரேன் ஆகாயவெளியை சூழ்ந்த போர் மேகங்கள்

உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

1 mins read
ac653fd4-27c4-4227-982b-17c31fc6c8cf
ரஷ்யா நடத்திய தீடீர் தாக்குதலால் உக்ரேன் தலைநகர் கீவ் வட்டாரம் போர்க்களமாக மாறியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

கீவ்: உக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் படைகள் பேரளவிலான தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ரஷ்யா நடத்திய தீடீர் தாக்குதலால் தலைநகர் கீவ் வட்டாரம் சனிக்கிழமை (டிசம்பர் 27) அதிகாலையில்  போர்க்களமாக மாறியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தத் தாக்குதலால் கீவ் நகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், தாக்குதலிலிருந்து நகரையும், அதன் ஆகாயவெளியையும் பாதுகாக்க உக்ரேன் ராணுவம் களமிறங்கியுள்ளதாகவும் உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரில் பாதுகாப்பை வலுப்படுத்த அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உக்ரேன் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையேயான கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கிய அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்திற்கு உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஆதரவு தெரிவித்த சில தினங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது அனைத்துலக  நாடுகளை மீண்டும் அதிர்ச்சியில் மூழ்கச் செய்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும், அமெரிக்கா  முன்வைத்த 20 அம்ச அமைதி ஒப்பந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கோரிக்கைகளை உக்ரேன் ஏற்பதாக அறிவித்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.

உக்ரேனின் தென்கிழக்கு வட்டாரத்தில் உள்ள முக்கிய நகர்ப் பகுதியைக் கைப்பற்றியதாக ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த உக்ரேனிய அதிகாரிகள், பாதுகாப்பில் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தபோதும், அவ்வட்டாரத்தை பாதுகாத்து, பெரும்பகுதியை தங்கள் வசமே தக்கவைத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறியது. 

குறிப்புச் சொற்கள்