கியவ்: உக்ரேனின் மின்சாரப் பற்றாக்குறையைச் சீர்செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தையும் கூடுதல் மின் சாதனங்களையும் இறக்குமதி செய்வதை விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சனிக்கிழமை (ஜனவரி 17) அவர் தெரிவித்தார்.
உக்ரேன் அரசாங்கம் மின்சார அவசரநிலையை அறிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களை ரஷ்யப் படைகள் சேதப்படுத்தியதால் அங்கு மின்சாரப் பற்றாக்குறை எழுந்துள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் நாட்டின் மொத்தத் தேவையில் 60 விழுக்காட்டை மட்டுமே பூர்த்தி செய்ய இயலும்.
மிதமிஞ்சிய குளிர் மக்களை வாட்டுவதால் மின்சாரத்தின் தேவை அதிகமாகி வருகிறது.
எனவே, நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக திரு ஸெலென்ஸ்கி தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அரசாங்கத்தின் உயர்நிலை அதிகாரிகளுடனும் ராணுவ அதிகாரிகளுடனும் அவர் நிலைமை குறித்து ஆராய்ந்தார்.
உக்ரேனின் பெரும்பாலான வட்டாரங்களில் மின்வெட்டு நடப்பில் இருந்து வருவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தலைநகர் கியவ்வைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலைமை மிகுந்த சவால்களை ஏற்படுத்தி உள்ளன. அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் நீண்டநேரம் இருட்டில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், குடியிருப்புக் கட்டடங்களில் குளிரைத் தணிக்கும் வெப்பக் கருவிகளுக்கு மின்சாரம் இல்லாததால் மக்கள் நாள் முழுவதும் குளிரில் நடுங்குகின்றனர். தற்போது அங்கு வெப்பநிலை 16 டிகிரி செல்சியசாக உள்ளது.

