உலு திராம் தாக்குதல்: தாக்குதல்காரரின் தந்தை, சகோதரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

உலு திராம் தாக்குதல்: தாக்குதல்காரரின் தந்தை, சகோதரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2 mins read
1bcdce51-1f9b-47b4-b848-d984619364d5
ராடின் இம்ரான் ராடின் முகம்மது யாசினுக்கும் (இடது) அவரது மகன் ராடின் ரோம்யுல்லாவுக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள உலு திராம் நகரில் இருக்கும் காவல் நிலையம் மீது ஆடவர் ஒருவர் 2024ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தினார்.

தாக்குதல்காரரான 21 வயது ராடின் லுக்மான் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர், வன்முறை சித்தாந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, மலேசிய உயர் நீதிமன்றத்தால் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) அவர்களுக்குத் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வன்முறை சித்தாந்த நம்பிக்கைகளைப் பரப்புதல், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவளித்தல், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காகத் துப்பாக்கிகளை வைத்திருத்தல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 64 வயது ராடின் இம்ரான் ராடின் முகம்மது யாசினுக்கு நீதிபதி நூருல்ஹுடா நுராய்னி முகம்மது நூர் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய புத்தகம் ஒன்றை வைத்திருந்ததற்காக ராடின் இம்ரானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

அவரது மகன் 36 வயது ராடின் ரோம்யுல்லாவுக்குப் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவளித்த ஒரு குற்றச்சாட்டுக்காக 30 ஆண்டுகளும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பொருள்களை வைத்திருந்ததற்காக மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் 2024ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர். அன்று முதல் அனைத்துத் தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக, தந்தை மற்றும் மகன் இருவருமே தலா மொத்தம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பார்கள்.

உலு திராம் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரிகளான 22 வயது அகமது அஸ்ஸா ஃபாமி அசார், 24 வயது முகம்மது ஷாஃபிக் அகமது சையது ஆகியோர் கொல்லப்பட்டனர். மற்றொரு காவல்துறை அதிகாரியான 38 வயது முகம்மது ஹசிஃப் ரோஸ்லான் என்ற மூன்றாவது அதிகாரி துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்தார்.

வன்முறை சித்தாந்தம் தொடர்பான தகவல்களை வழங்கத் தவறிய குற்றச்சாட்டு ஒன்றை ஒப்புக்கொண்டதையடுத்து, ராடின் இம்ரானின் மனைவியும் சிங்கப்பூரருமான 61 வயது ரோஸ்னா ஜந்தானுக்கு நீதிமன்றம் முன்னதாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

அவருடைய தண்டனையும் 2024ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, வன்முறை சித்தாந்தம் தொடர்பான தகவல்களை வேண்டுமென்றே வழங்க மறுத்த குற்றச்சாட்டை அரசுத் தரப்பு திரும்பப் பெறுவதாக வழக்கறிஞர் நோரின்னா பஹதூன் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, ராடின் இம்ரானின் மகள்களான 25 வயது ஃபர்ஹா சோப்ரினா, 21 வயது மரியா ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்