மூன்று பிரபலங்களை மீண்டும் இணைத்துக்கொள்ள அம்னோ சம்மதம்

மூன்று பிரபலங்களை மீண்டும் இணைத்துக்கொள்ள அம்னோ சம்மதம்

1 mins read
e5bd78c4-8f25-4b4b-9b16-882089fa7dcf
முன்னாள் துணைத் தலைவர் ஹிஷாமுதீன் ஹுசைன், முன்னாள் இளையர் தலைவர் கைரி ஜமாலுதீன், சையத் ஹமீத் அல்பார் ஆகியோரை மீண்டும் கதவுகள் திறந்திருப்பதாக அம்னோ தெரிவித்துள்ளது. - படம்: த ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: தனது முன்னாள் தலைவர்கள் மூவரை நிபந்தனையின்றி மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள அம்னோ ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் இளையர் தலைவர் கைரி ஜமாலுதீன், முன்னாள் துணைத் தலைவர் ஹிஷாமுதீன் ஹுசைன், சையத் ஹமீத் அல்பார் ஆகியோர் அம்மூவர்.

மலாக்காவில் நடைபெற்ற அம்னோ தலைமைத்துவக் கூட்டத்தைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) இரவு முகநூல் பதிவில், அந்த மூவரின் கட்சி உறுப்பினர் பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டதை அம்னோ பொதுச்செயலாளர் டாக்டர் அஷ்ரஃப் வாஜ்தி துசுகி உறுதிப்படுத்தினார்.

தம்மீதான இடைநீக்கம் விலக்கப்பட்டால் அம்னோ கட்சிக்குத் திரும்பத் தயாராக இருப்பதாக ஹிஷாமுதீன் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

திரு. கைரியும் ஜனவரி 2023ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, மேல்முறையீட்டுக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்ததாகக் கூறப்பட்டது.

கட்சி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, 2018ஆம் ஆண்டு அம்னோவிலிருந்து விலகிய திரு. சையத் ஹமீத், பெர்சத்து கட்சியில் இணைந்தார். அவரும் அண்மையில் கட்சியில் மீண்டும் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கட்சிக்குத் திரும்ப விரும்பும் முன்னாள் உறுப்பினர்களுக்குக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி முன்னதாகக் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்