அன்வார் அரசாங்கத்துக்கான ஆதரவு தொடரும் என அம்னோ அறிவிப்பு

அன்வார் அரசாங்கத்துக்கான ஆதரவு தொடரும் என அம்னோ அறிவிப்பு

2 mins read
acb68e34-1e35-4b54-b259-20bd63a92bbf
கடந்த ஜனவரி மாதம் கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திற்குப் பிறகு காணப்பட்ட அம்னோ தலைவர்கள். - கோப்புப் படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றபோதிலும் மத்தியில் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்துக்கான ஆதரவை அம்னோ மறுஉறுதிப்படுத்தி உள்ளது.

ஜோகூர் , நெகிரி செம்பிலான் சட்டமன்றங்களுக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அம்னோவும் திரு அன்வாரின் பக்கத்தான் ஹரப்பானும் அந்தத் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக தனித்தனியாக அறிவித்துள்ளன.

மத்தியில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியோடு இணைந்து தேசிய முன்னணி அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டதைப்போல நெகிரி செம்பிலானிலும் அவை ஒன்றாக இருந்தன.

ஆயினும், 36 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அம்னோவின் 14 உறுப்பினர்கள் ஏப்ரல் இறுதியில் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கியதைத் தொடர்ந்து, அது சிறுபான்மை அரசாங்கமாக மாறியது.

இந்நிலையில், ஜூன் 5ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

அந்த மாநிலத்தைப்போலவே ஜோகூரிலும் பக்கத்தான் ஹரப்பானும் அம்னோவும் எதிரெதிர் களத்தில் உள்ளன.

அதேபோல 56 உறுப்பினர்களைக் கொண்ட ஜோகூர் சட்டமன்றத்தில் தேசிய முன்னணிவசம் 40 உறுப்பினர்கள் இருந்தனர்.

புதிய தேர்தலுக்கு வழிவிடும் வகையில் ஜூன் 1ஆம் தேதி அந்தச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

ஐந்தாண்டுத் தவணைக் காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்வரை இருந்த நிலையில் திடீரென ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது.

அங்கு அம்னோ தனியாகக் களமிறங்க எடுத்திருக்கும் முடிவு சட்டபூர்வமான, முதிர்ச்சியான, அரசியலமைப்புக்கு உட்பட்ட ஜனநாயகச் செயல் என்று அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ரஃப் வஜ்தி துசுகி புதன்கிழமை (ஜூன் 10) கூறினார்.

அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்கள் நலன் கருதி எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற அம்னோ தாயராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

புதன்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்சிகளின் ஒத்துழைப்பு என்பது நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கைகளில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
அம்னோஅன்வார் இப்ராகிம்தேசிய முன்னணி