கோலாலம்பூர்: மலேசியாவில் உடனடியாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அம்னோ கட்சியின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) பேசிய அதன் தலைவரும், மலேசியத் துணைப் பிரதமருமான அகமத் ஸாகித் ஹமிடி, தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பொதுத் தேர்தலே இறுதியான தருணம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியப் பிரதமர் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியுடனான அம்னோவின் உறவு தற்போதைய ஆட்சிப் பொறுப்புடன் முடிவுக்கு வரக்கூடும் என்பதை ஸாகித் ஹமிடியின் பேச்சு வெளிப்படையாக உணர்த்துகிறது.
அண்மையில் நடைபெற்ற இரு மாநிலத் தேர்தல்களில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேஷனல் கூட்டணியும், பக்கத்தான் கூட்டணியும் எதிரெதிராகப் போட்டியிட்டதில் இருந்தே அன்வாருக்கும் ஸாகித்திற்குமான உறவில் விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.
கூட்டத்தில் அன்வாரை மறைமுகமாகக் குறிப்பிட்ட ஸாகித், “ஆசிரியர் கற்பித்தது போதும், எங்களால் அவரைவிடச் சிறப்பாகச் செயல்பட முடியும்,” என்று சாடினார். மலாய் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்திய அவர், இஸ்லாமியக் கட்சியான பாஸ் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியுடன் கைகோப்பது குறித்துச் சூசகமாகத் தெரிவித்தார்.
மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டை ஆட்சி செய்து வந்த பாரிசான் நேஷனல் கூட்டணி, கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாகத் தனது ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

