பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியையும் அம்னோ உறுதியாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவரும் துணைப் பிரதமருமான டாக்டர் ஸாஹித் ஹமிடி கூறியுள்ளார்.
கூட்டணியின் கோட்பாடுகளை ஒத்து அம்னோ கட்சியின் நிலை இருக்கும். அதில் மாற்றம் இருக்காது. அரசியல் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
“ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்ததில்லை. அடுத்த பொதுத் தேர்தல் வரை எங்களுடைய கட்சி அரசாங்கத்தில் நீடிக்கும்,” என்றார் அவர்.
புத்ரஜெயாவில் இன்று (ஜனவரி 6) நகர்ப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
“எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சில மாநில பிரதிநிதிகள் சிலர் யோசனை தெரிவித்தனர். தகுந்த நேரத்தில் அரசாங்கத்திலிருந்து விலகுவதும் அவற்றில் அடங்கும். அம்னோ-தேசிய முன்னணி-எதிர்க்கட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டன.
“ஆரம்பத்திலிருந்தே கட்சியும் நானும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம்,” என்று திரு ஸாஹித் ஹமிடி கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி எதிர்க்கட்சிகளிடம் சேர வேண்டும் என்று அம்னோ இளையர் தலைவர் முஹமட் அக்மல் சாலே விடுத்த அழைப்புக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இதற்கிடையே உள்துறை அமைச்சரான சைஃபூதின் நசுதியோன் இஸ்மாயில், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் அம்னோ ஆற்றி வரும் பங்கை பாராட்டியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
அரசியல் நிலைத்தன்மையை அம்னோ உறுதி செய்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் நிர்வாகம் சுமூகமாக செயல்பட உதவி புரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பானின் தலைமைச் செயலாளருமான சைஃபூதின் நசுதியோன், மலாய் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அம்னோவின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டினார்.
ஆட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்தி அரசாங்கம் ஆற்றலுடன் செயல்பட அம்னோ முக்கியப் பங்கு ஆற்றிவருவதாகவும் திரு சைஃபூதீன் நசுதியோன் குறிப்பிட்டார்.
அன்வார் இப்ராகின் தலைமையிலான அரசாங்கத்தில் அம்னோ கட்சியைச் சேர்ந்த எட்டு பேர் முழு அமைச்சர்களாக உள்ளனர்.

