பெட்டாலிங் ஜெயா: இந்த வாரம் நடைபெறவுள்ள அம்னோவின் ஆண்டுப் பொதுக்கூட்டம், கட்சியின் அண்மைய தேர்தல் வெற்றிகளைத் தொடர் வெற்றிகளாக மாற்ற முடியுமா என்பதற்கான ஒரு முக்கியப் பரிசோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலாக்கா தேர்தலிலும் 16ஆவது பொதுத்தேர்தலிலும் வெற்றியைத் தொடர்வது குறித்து அந்தக் கூட்டத்தில் அம்னோ பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், மலேசிய எதிர்க்கட்சியான பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான ஒரு தெளிவான பாதையை அந்தக் கூட்டம் வகுக்கக்கூடும் என்று தலைவர்களும் அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அம்னோ அண்மையில் பெற்ற தேர்தல் வெற்றிகள் கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரஃபி தெரிவித்தார்.
“தங்கள் வாழ்க்கையில் அதிக நிலைத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை எதிர்பார்க்கும் மக்களின் ஆதரவோடு நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்பதால் அந்த வெற்றிகள் முக்கியமானவையாகக் கருதி கொண்டாடப்படும்.
“அடுத்த பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் என்பதால், அதற்கான ஆயத்தப் பணிகளில் கவனம் செலுத்துவோம்,” என்று அவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) கூறினார்.
மலேசியாவின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கு 2028 பிப்ரவரி வரை காலக்கெடு உள்ளது.
இருந்தபோதிலும், மக்களின் புதிய தீர்ப்புகளைப் பெற தேர்தல் உதவும் என்று குறிப்பிடும் அம்னோ தலைவர் அகமத் ஸாஹித் ஹமிதி, பொதுத்தேர்தலை முன்கூட்டி நடத்த ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் தலைவருமான அவர், நாடாளுமன்றம் தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்தாலும்கூட, தங்களது கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அம்னோவின் ஆண்டுப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 9 முதல் 12 வரை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 6,401 அம்னோ நிர்வாகிகள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் 1,163 பேர் மகளிர் அணியினராகவும் 1,171 பேர் இளையர் அணியினராகவும் இருப்பர்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாதி அவாங் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


