நியூயார்க்: உலக நாடுகளில் கடந்த ஆண்டு 47,000க்கும் அதிகமான பெண்களும் சிறுமிகளும் உறவினர்களால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் 129 பெண்களும் சிறுமிகளும் கொலை செய்யப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஐநா வெளியிட்ட அந்த அறிக்கையின்படி, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்புநோக்க, அந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
கடந்த சில ஆண்டுகளில் நெருங்கிய துணை அல்லது குடும்ப உறுப்பினரால் கொலை செய்யப்பட்ட பெண்கள், சிறுமிகளின் எண்ணிக்கை 45,000லிருந்து 51,000க்கு இடைப்பட்டிருப்பதாக ஐநா மகளிர் அமைப்பும் ஐநா போதைப்பொருள், குற்றவியல் அலுவலகமும் குறிப்பிட்டன.
கடந்த ஆண்டு திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட 78,000 பெண்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் நெருங்கிய துணையாலும் குடும்ப உறுப்பினராலும் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை சுட்டியது.
2025ஆம் ஆண்டில் உலகளவில் கொலை செயப்பட்டோரில் பெண்களின் எண்ணிக்கை 19 விழுக்காடாக இருந்தபோதிலும் அவர்களில் 60 விழுக்காட்டினர் தனிப்பட்ட அல்லது குடும்பச் சூழலிலேயே கொல்லப்பட்டனர்.
அதற்கு மாறாக, கொல்லப்பட்ட ஆண்களில் 11 விழுக்காட்டினர் மட்டுமே அத்தகைய சூழ்நிலைகளில் கொலை செய்யப்பட்டனர்.
உலகின் எந்தப் பகுதியும் முழுமையாகப் பாதுகாப்பானதாக இல்லை. இருப்பினும், நெருக்கமான துணைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட பெண்கள், சிறுமிகளின் எண்ணிக்கையில் ஆப்பிரிக்கா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மட்டும் 22,100 பேர் கொலை செய்யப்பட்டனர்.
அதற்கு அடுத்தபடியாக ஆசியாவில் 15,100 பேரும், அமெரிக்கக் கண்டங்களில் 7,400 பேரும், ஐரோப்பாவில் 2,100 பேரும், ஓசியானியாவில் 300 பேரும் கொல்லப்பட்டனர்.
உலகளவில் ஒட்டுமொத்தக் கொலை விகிதங்கள் குறைந்துள்ள போதிலும், பெண்கொலை விகிதங்கள் மெதுவாகவே குறைந்து வருவதாகவும், குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களிலும் ஐரோப்பாவிலும் அந்த நிலை காணப்படுவதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
“இந்தக் குற்றங்கள், சமூக விதிமுறைகள், பாலினம் சார்ந்த ஒரே மாதிரியான கருத்துகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதைக் காட்டுகிறது,” என்று ஐநா தெரிவித்தது.
மேலும், நீதித்துறையை அணுகுவதில் உள்ள தடைகளையும் அது எடுத்துக்காட்டுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.
