மனிதாபிமானத் தேவை: 62 பில்லியன் வெள்ளிக்கு ஐநா கோரிக்கை

மனிதாபிமானத் தேவை: 62 பில்லியன் வெள்ளிக்கு ஐநா கோரிக்கை

1 mins read
22cd14ce-4ca2-409d-b07b-6e6481d9301b
டேர் அல் பலா நகரில் உள்ள ஐநா உதவி விநியோக நிலையத்திலிருந்து பாலஸ்தீனர்கள் உலர் பருப்புகளை எடுத்துச்செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

ஜெனீவா: பாலஸ்தீனம், சூடான், உக்ரேன் உட்பட உலகம் முழுதும் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன்கணக்கானோருக்கு உதவ, அடுத்த ஆண்டு 46 பில்லியன் அமெரிக்க டாலர் (S$62 பில்லியன்) நிதியுதவிக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் (ஐநா) கோரிக்கை விடுத்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான அதன் உலக மனிதாபிமான கண்ணோட்ட அறிக்கையில், பூசல்கள், பருவநிலை நெருக்கடிகள், பொருளியல் அம்சங்கள் ஆகியவற்றால் கிட்டத்தட்ட 300 மில்லியன் பேருக்கு 2024ல் மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் நிறுவன அலுவலகம் தெரிவித்தது.

ஆப்பிரிக்காவின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் உள்ள 74.1 மில்லியன் பேர் அவர்களில் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சூடான் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள்.

செஞ்சிலுவைச் சங்கம், தேசிய செஞ்சிலுவை சமுதாயங்கள் உள்ளிட்ட மற்ற அமைப்புகள் அவற்றின் சொந்த நிதிக் கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவன உதவிப் பிரிவுத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறினார்.

மனிதாபிமானக் கட்டமைப்பு பெரிய அளவிலான நெருக்கடியை எதிர்கொள்கிறது. 2024ஆம் ஆண்டுக்கான நிதிக் கோரிக்கையைக் குறைப்பது சிரமமாக இருந்ததாகத் திரு கிரிஃபித்ஸ் கூறினார்.

“ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கு வட்டாரம், காஸா, மேற்குக் கரை ஆகியவை ஆக அதிக தேவைகளைக் கொண்ட பகுதிகளாக இருக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்