இயற்கைக்கு எதிரான போரை நிறுத்துமாறு ஐநா தலைவர் கோரிக்கை

இயற்கைக்கு எதிரான போரை நிறுத்துமாறு ஐநா தலைவர் கோரிக்கை

படம்: ஏஎஃப்பி

16 Oct 2026 - 7:43 pm

2 mins read

பாரிஸ்: இயற்கைக்கு எதிரான பேரழிவுப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாட்டு (ஐநா) நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துத்துள்ளார். உலகம், தனது பல்லுயிர்ப் பெருக்க இலக்குகளை அடைவதில் பின்தங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டும் அறிக்கையை வியாழக்கிழமை (அக்டோபர் 15) வெளியிட்டபோது அவர் அவ்வாறு கூறினார்.

அடுத்த வாரம் அர்மீனியத் தலைநகர் எரிவானில் நடைபெறவுள்ள ஐநா பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த பேச்சின்போது, 2030க்குள் இயற்கையின் அழிவைத் தடுப்பதற்கான இலக்கை நோக்கி எட்டியுள்ள முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் நாடுகள் மதிப்பீடு செய்யும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இயற்கைக்கான பாரிஸ் ஒப்பந்தத்தில்’ கிட்டத்தட்ட 200 நாடுகள் இணைந்தன; ஆனால் அதன் நோக்கங்களைச் செயல்படுத்துவது மெதுவடைந்திருப்பதாகக் கூறப்பட்டது.

2030க்குள் இயற்கைக்கு ஏற்படக்கூடிய இழப்பைத் தடுத்து நிறுத்தி மீட்டெடுப்பதற்கான 23 இலக்குகளை இந்த ஒப்பந்தம் வகுத்திருந்தது. காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைத்தல், அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களைப் பாதுகாத்தல், உலகின் 30 விழுக்காட்டு நில, பெருங்கடற்பகுதிகளைப் பாதுகாத்தல் முதலியவை அவற்றுள் அடங்கும்.

ஆனால் இந்த இலக்குகளில் பல, தவறான பாதையில் செல்கின்றன என்று திரு குட்டரெஸ் கூறினார்.

“எல்லாமே கெட்ட செய்தி அல்ல... முன்னேற்றம் இருக்கிறது, ஆனால் போதுமானதாக இல்லை. தேவையான அளவை எட்டுவதிலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

வளர்ச்சியடையும் நாடுகளுக்கு அளித்த நிதியுதவி வாக்குறுதிகளை நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய திரு குட்டரெஸ், இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் இல்லாததைச் சுட்டிக்காட்டினார்.

புதைபடிவ எரிபொருள் உற்பத்தி, சுரங்கம், வேளாண் போன்ற தொழில்களுக்கான அரசாங்க நிதியுதவி உட்பட இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் மானியங்களை 2030க்குள் ஆண்டுக்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் ($641.24 பில்லியன்) அளவுக்குக் குறைக்க நாடுகள் உறுதியளித்திருந்தன; ஆனால் அதில் மிகக் குறைந்த அளவே முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்