காஸா சிட்டி: காஸாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ‘டாக்டர்ஸ் வித்தாவுட் பார்டர்ஸ்’ என்ற அனைத்துலக அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தால் தாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பதாக அவர் சனிக்கிழமை (நவம்பர் 28) கூறினார்.
கொல்லப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேலிய ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகள் என்று தெரிவித்தது.
போர் நிறுத்த உடன்பாடு நடப்பில் இருந்தபோதும் நவம்பர் 27ஆம் தேதி தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவத்தை உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் சாடினார்.
“காஸாவில் உள்ள எங்கள் மருத்துவமனை வளாகத்தில் ‘டாக்டர்ஸ் வித்தாவுட் பார்டர்ஸ்’ என்ற அறிவிப்பு சின்னங்கள் தெளிவாகப் போடப்பட்டிருந்தன. அதுகுறித்து இஸ்ரேலிய ராணுவத்திற்கும் ஏற்கெனவே தகவல் அளித்திருந்தோம்,” என்று ‘டாக்டர்ஸ் வித்தாவுட் பார்டர்ஸ்’ அமைப்பு சுட்டியது.
மருத்துவமனையில் இருந்த ஆடவர் இருவர் கொல்லப்பட்டது வேதனை அளிப்பதாகச் சொன்ன அமைப்பு, அவர்கள் இருவரும் அங்குப் பாதுகாவலர்களாகப் பணியாற்றியதை உறுதிப்படுத்தியது.
‘டாக்டர்ஸ் வித்தாவுட் பார்டர்ஸ்’ அமைப்பிற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிய திரு குட்டரெஸ், அனைத்துலக மனிதநேய சட்டத்தின்கீழ் உள்ள விதிமுறைகளை அனைத்துத் தரப்புகளும் கட்டாயமாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கொல்லப்பட்ட ஆடவர் இருவரை இஸ்ரேலிய ராணுவம், அகமது அபு ஹசிரா என்றும் மோவாஸ் சோப் என்றும் குறிப்பிட்டது. அதில், மோவாஸ் சோப் என்பவர் ஹமாஸ் பீரங்கிப் படைத் தளபதி என்று இஸ்ரேலிய ராணுவம் அடையாளம் கண்டதாகச் சொன்னது.
பயங்கரவாதிகளாக இருந்துகொண்டே ‘டாக்டர்ஸ் வித்தாவுட் பார்டர்ஸ்’ மருத்துவமனையில் அவர்கள் பாதுகாவலர்களாகப் பணியாற்றியதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
தனது தாக்குதல் மருத்துவமனையைக் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் அந்த வட்டாரத்தில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்புக்கு எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என்றும் அது மேலும் கூறியது.
ஃபிரான்சிற்கான பாலஸ்தீனத் தூதர் ஹலா அபு ஹசிரா, கொல்லப்பட்ட ஆடவரில் ஒருவர் தமது 25 வயது உறவினர் என்றார். அவர் மிகவும் கனிவன்புமிக்கவர் என்று ஹசிரா தெரிவித்தார்.
